காவிரி நீர்ப் பங்கீடு விவகாரத்தில் அமைப்பின் பெயர் எதுவாக இருந்தாலும் பிரச்னையில்லை. அதன் செயல்பாடுதான் முக்கியம் என்று மத்திய நீர்வளத்துறை செயலர் யு.பி.சிங் தெரிவித்துள்ளார்.

காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பில் குறிப்பிடப்பட்ட ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டு மத்திய அரசு தாக்கல் செய்த மனுவையும் தமிழக அரசு சார்பில் மத்திய அரசுக்கு தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் நேற்று உச்சநீதிமன்றம் விசாரித்தது. 

அப்போது, தமிழகத்திற்கான நீர் குறைப்பை தவிர மற்ற அனைத்து அம்சங்களும் காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை உள்ளடக்கியதுதான். எனவே காவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரத்தில் ஒரு வரைவு செயல்திட்டத்தை உருவாக்கி வரும் மே 3ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நீர்வளத்துறை செயலர் யு.பி.சிங், காவிரி நீர்ப் பங்கீடு விவகாரத்தில் அமைப்பின் பெயர் எதுவாக இருந்தாலும் பிரச்னையில்லை. அதன் செயல்பாடுதான் முக்கியம். உச்ச நீதிமன்ற இறுதி தீர்ப்பை செயல்படுத்துவதற்கான திட்டம் பற்றி மட்டுமே தற்போது பரிசீலனை செய்து வருகிறோம். 

காவிரி நீர் திறப்பு தொடர்பான அமைப்பை ஏற்படுத்துவது குறித்து தீவிர பரிசீலனை நடந்து வருகிறது. தீர்ப்பை அமல்படுத்துவதற்கான ஸ்கீமை வகுத்துக் கொடுக்குமாறு உச்ச நீதிமன்றம் கேட்டுள்ளது. அதை காவிரி மேலாண்மை வாரியம் என்று தமிழகம் அழைப்பதில் எந்த பிரச்னையும் இல்லை. நடுவர் மன்ற உத்தரவை இணைத்தே தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதாக உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

அவரவர் மாநில நலன் அடிப்படையில் இந்த பிரச்னை பார்க்கப்படுகிறது. ஆனால் மத்திய அரசு கூட்டாட்சி அடிப்படையில் இப்பிரச்னையை அணுகுகிறது. காவிரி நீர் பங்கீடு விஷயத்தில் எது சிறந்ததோ அதை மத்திய அரசு செய்யும் என யு.பி.சிங் தெரிவித்தார்.