புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியக் குழு தலைவராக அதிமுக எம்எல்ஏவின் தம்பி பரணி கார்த்திகேயன் திமுகவில் போட்டியின்றி ஒன்றியக் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

தமிழகத்தில் மாவட்ட ஊராட்சி தலைவர், ஒன்றிய குழு தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியத்தில் 15 வார்டுகளில் திமுக - அதிமுக  வேட்பாளர் போட்டியிட்டனர். கடைசி நேரத்தில் 15-வது வார்டு அதிமுக வேட்பாளர் நாராயணன் திமுகவில் இணைந்தார். அதேபோல அதிமுக எம்எல்ஏ ரத்தினசபாபதி மகன் திமுக வேட்பாளருக்கு திடீரென வாக்கு சேகரித்து அதிர்ச்சி அளித்தார். இந்நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியான போது 14 வார்டுகளில் திமுகவும், ஒரு வார்டில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று அனைத்து இடங்களையும் கைப்பற்றி அதிமுகவிற்கு அதிர்ச்சி கொடுத்தது. 

இதையடுத்து இன்று நடைபெற்ற தேர்தலில் அறந்தாங்கி தொகுதி அதிமுக எம்எல்ஏ ரத்தினசபாபதியின் தம்பியும் திமுகவைச் சேர்ந்தவருமான பரணி கார்த்திகேயன் ஒன்றியக் குழு தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமமுகவில் இருந்து விலகி சில மாதங்களுக்கு முன்பு திமுகவில் கார்த்திகேயன் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.