Asianet News TamilAsianet News Tamil

அப்படிபோடு.. மக்களை அலைக்கழித்தால் கடும் நடவடிக்கை... ரேஷன் கடை ஊழியர்களுக்கு எச்சரிக்கை..!

 உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சரும் சட்டப்பேரவையில் 5 வயதுக்கு மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள் யாரும் வந்து கைரேகை பதிந்து பொருட்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும், நியாயவிலைக் கடைக்கு வரமுடியாதவர்களால் அத்தாட்சி அளிக்கப்பட்ட நபர்கள் வழியாகப் பொருட்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் 16.08.2021 அன்று தெரிவித்துள்ளார்.

Warning to ration shop employees
Author
Tamil Nadu, First Published Sep 21, 2021, 4:48 PM IST

ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க வரும் குடும்பதாரரை அலைக்கழித்தால் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இது தொடர்பாக, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையாளர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்;- 

* தமிழகத்தில் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டம், மத்திய அரசு அறிமுகப்படுத்திய பின் விரல் ரேகை சரிபார்ப்பு முறையில் நியாயவிலைக் கடைகளில் இன்றியாமையாப் பண்டங்கள் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

*  நியாயவிலைக் கடைகளுக்குச் செல்ல இயலாத முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் இதர நபர்கள், இதற்கென உரிய படிவத்தில் அவரால் அத்தாட்சி செய்யப்பட்ட நபரின் விவரத்தைப் பதிந்து நியாயவிலைக் கடையில் கொடுத்து அந்த நபரின் வாயிலாக உணவுப் பொருட்கள் பெறுவது தொடர்பான விரிவான அறிவுரைகள் ஏற்கெனவே ஜனவரி 2021-ல் வழங்கப்பட்டுள்ளன.

* ஒவ்வொரு நியாயவிலைக் கடையிலும் இதற்கான படிவங்களை இருப்பு வைத்து தேவைப்படும் அட்டைதாரர்களுக்கு நியாயவிலைக் கடையிலேயே விநியோகித்துப் பூர்த்தி செய்து பெற்றுத் தொடர்புடைய நடவடிக்கைகள் அனைத்தையும் நியாயவிலைக் கடை பணியாளரே மேற்கொண்டு அட்டைதாரரின் அங்கீகரிக்கப்பட்ட நபர் வாயிலாக உணவுப் பண்டங்கள் விநியோகிக்க வேண்டுமென ஆணையிடப்பட்டுள்ளது. இந்த அங்கீகாரப் படிவம் இத்துறையின் www.tnpds.gov.in என்ற இணையதளத்தில் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையிலும் வெளியிடப்பட்டுள்ளது.

* இதை உரிய முறையில் செயல்படுத்த வலியுறுத்தி மீண்டும் சுற்றறிக்கை மார்ச் 2021 மாதத்தில் அனுப்பப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், அநேக முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தொடர்ந்து பயன்பெற்று வருகின்றனர். இதற்கெனவே விற்பனை இயந்திரத்தில் கைரேகை சரிபார்ப்பு இல்லாமல் குடும்ப அட்டையினை மட்டும் ஸ்கேன் செய்து விற்பனைப் பரிவர்த்தனையினைப் பதிவேட்டில் அங்கீகரிக்கப்பட்ட நபரின் கையொப்பம் பெற்று அவரிடம் பொருட்கள் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மேற்குறிப்பிட்ட அட்டைதாரர்கள் எவரும் நியாயவிலைக் கடைகளுக்கு வராமலேயே அவரால் அத்தாட்சி செய்யப்பட்டவர் வழியாக பொருட்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

* இது தொடர்பாக, உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சரும் சட்டப்பேரவையில் 5 வயதுக்கு மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள் யாரும் வந்து கைரேகை பதிந்து பொருட்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும், நியாயவிலைக் கடைக்கு வரமுடியாதவர்களால் அத்தாட்சி அளிக்கப்பட்ட நபர்கள் வழியாகப் பொருட்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் 16.08.2021 அன்று தெரிவித்துள்ளார்.

* இருப்பினும், தற்போது புகார்கள் பெறப்படும் நிலையில், இதுவரை அங்கீகாரப் படிவம் அளிக்காத மேற்குறிப்பிட்ட அட்டைதாரர்கள் அங்கீகாரப் படிவத்தினை நியாயவிலைக் கடையில் பெற்றுப் பூர்த்தி செய்து கடையில் வழங்கிய உடனேயே உணவுப் பண்டங்கள் விநியோகிக்கத் தொடர்புடையவர்களுக்கு மீண்டும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இதை மீறி இனி யாரேனும் எந்தக் குடும்பதாரரை அலைக்கழித்தாலும் அவர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த அறிவுரைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

* மேலும், 22.08.2021 முதல் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம் வாயிலாகப் பொது விநியோகத் திட்டப் பணிகளைச் சிறப்பாக நடைமுறைப்படுத்த மாநிலம் முழுவதும் நியாய விலைக் கடைப் பணியாளர்களுக்குப் பயிற்சி நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அப்பயிற்சியின்போது குடும்ப அட்டைதாரர்களுக்கு, குறிப்பாக, வயது முதிர்ந்த மாற்றுத்திறனாளிகளாக உள்ள அட்டைதாரர்களுக்கு உயர்ந்த சேவை வழங்கும் விதம் தொடர்பான பயிற்சியும், அறிவுரைகளும் அனைத்து நியாயவிலைக் கடைப் பணியாளர்களுக்கும் வழங்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios