கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கடைசிவரை கூட்டணியை இறுதி செய்யாமல் விட்டதுபோல நாடளுமன்றத் தேர்தலிலும் நடந்துவிடுமோ என்ற அச்சம் தமாகா தொண்டர்கள் மத்தியில் நிலவி வருகிறது.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தேர்தல் அறிவிப்புக்கு பிறகும் கூட்டணியை இறுதி செய்யாமல் இருந்தது தாமகா. திமுக கூட்டணியில் வாசன் சேர காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தது. இதனால், அந்தக் கூட்டணியில் வாசன் இடம் பெறமுடியவில்லை. இன்னொரு புறம் அதிமுக கூட்டணியில் இடம் பெறுவதற்காக அந்தக் கட்சி  நீண்ட நாட்கள் காத்திருந்தது. கடைசியில் அதிமுக கூட்டணியிலும் இடம் கிடைக்காமல்போகவே, வேறு வழியில்லாமல் மக்கள் நலக் கூட்டணியில் சேர்ந்தது. 

தற்போது நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் வேளையில் மீண்டும் அதுபோன்ற சூழ்நிலைதான் வாசனை நெருக்கி வருகிறது. எந்தக் கூட்டணியில் இடம் பெறுவது என அந்தக் கட்சி குழப்பத்தில் ஆழ்ந்துள்ளது. முன்னாள் மக்கள் நலக் கூட்டணி திமுகவில் ஐக்கியமாகிவிட்ட நிலையில், தமாகா மட்டும் தனித்திருக்கிறது. தமிழகத்தில் கூட்டணி அமைத்துதான் நாடாளுமன்றத் தேர்தலை சந்திப்போம் என்று வாசன் அறிவித்துவிட்டார்.

  

திமுகவுடன் கூட்டணி வைக்க வாசன் விரும்பும் நிலையில், திமுக சைடிலிருந்து இதுவரை எந்த பாசிட்டிவான தகவலும் வாசனுக்குக் கிடைக்கவில்லை என்கிறார்கள் கட்சியினர். இருந்தாலும் தமாகா மனம் தளராமல் காத்திருக்கிறது. அதே வேளையில் அதிமுக பிளவுக்கு பிறகு ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் ஓ.பி.எஸ். அணியை வாசன் ஆதரித்தார். அந்த அடிப்படையில் மீண்டும் அதிமுக கூட்டணியில் சேரலாம் என்றும் வாசனிடம் சில கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தியிருக்கிறார்கள். 

ஆனால், வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும் என்பதால் வாசன் தயங்கிவருகிறார். அமமுகவோடு கூட்டணி சேரும் திட்டத்தையும் சிலர் வாசனிடம் வைத்திருக்கிறார்கள். அமமுகவும் வாசன் கூட்டணிக்கு வருவதை நிச்சயம் விரும்பினாலும், வாசன் இன்னும் இதில் தெளிவான முடிவு எதையும் எடுக்கவில்லை என்று தகவல்கள் கூறுகின்றன. கூட்டணி விஷயத்தில் இதுவரை எந்தத் தெளிவும் பிறக்காததால், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நடந்ததைப் போல இந்த முறையும் நடந்துவிடுமோ என்ற அச்சம் தமாகா தொண்டர்கள் மத்தியில் நிலவி வருகிறது.