முதலமைச்சரை மாற்ற வேண்டும் என்பது தான் எங்களுக்கு இலக்கு. பொறுத்திருந்து பாருங்கள் என்று டிடிவி தினகரன் ஆதரவாளர் தங்க. தமிழ்செல்வன் கூறியுள்ளார்

பிளவுபட்ட அதிமுக அணிகள், நீண்ட நாள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு நேற்று இணைந்தன. இந்த இணைப்புக்குப் பிறகு, ஓ.பன்னீர்செல்வத்துக்கு துணை முதலமைச்சர் பதவியும், மாஃபா. பாண்டியராஜனுக்கு அமைச்சர் பதவியும் அளிக்கப்பட்டன.

ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., அணிகள் இணைப்புக்குப் பிறகு, கட்சியில் இருந்து சசிகலாவை நீக்க விரைவில் பொதுக்குழு கூட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதனால், டிடிவி தினகரன் அணியினர் அதிருப்திக்கு ஆளாகினர். பதவிக்காக அணிகள் இணைந்ததாக டிடிவி அணியினர் கூறினர். இந்த நிலையில், இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தரும் ஆதரவை வாபஸ் பெறுவதாக கூறி, டிடிவி அணியினர், ஆளுநரை சந்தித்து மனு அளித்தனர்.

இந்த நிலையில், டிடிவி தினகரன் ஆதரவாளரான எம்.எல்.ஏ., தங்க. தமிழ்ச்செல்வன், செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் அப்போது பேசியதாவது: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மாற்றச் சொல்லி நாங்கள் 19 பேர்கையெழுத்திட்டு ஆளுநரிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சின்னம்மா இல்லை என்றால் இந்த அரசு இல்லை. 132 உறுப்பினர்கள் ஓட்டுப்போட்டு ஜெயிக்க வைத்த எங்களுக்கு துரோகம் இழைக்கப்பட்டுள்ளது. 

ஓ.பன்னீர்செல்வம், ஊழல் அரசு என்றார். இரட்டை இலையை முடக்கினார். கட்சியை முடக்க நினைத்தார். அவருக்கு தற்போது பதவி அளித்தது ஏன்? அதற்கு காரணம் என்ன?

சின்னம்மாவை நீக்க வேண்டும் என்பது வேதனை அளிக்கிறது. தொண்டர்கள் அனைவரும் வேதனையில் உள்ளனர். அரசுக்கு ஆதரவாக செயல்பட்ட எங்களை எடப்பாடி பழனிசாமி ஏமாற்றி விட்டார். முதலமைச்சரை மாற்ற வேண்டும் என்பது தான் எங்களுக்கு இலக்கு. பொறுத்திருந்து பாருங்கள்.

இவ்வாறு கூறினார்.