VV Rajan Chellappa Says No one has any influence other than Jayalalithaa
இந்த நிமிடம் வரை அ.தி.மு.க.வை இயக்குவது நான்கு விசுவாசங்கள்.... ஒன்று சசிகலாவும், தினகரனும் நிச்சயம் மீண்டு வருவார்கள் எனும் நம்பிக்கையில் இயங்கும் நாஞ்சில் சம்பத் மற்று பெங்களூரு புகழேந்தியின் ‘சசி விசுவாசம்.’. இரண்டாவது, ஆளும் கூட்டத்தோடு இருந்தால்தான் அதிகாரமும், பண பயனும் கிடைக்கும் எனும் எண்ணத்தில் எடப்பாடியாரோடு ஒட்டி நகரும் விசுவாச கூட்டம். மூன்றாவது, பா.ஜ.க.வின சப்போர்ட் இருப்பதால் எப்படியாவது அரசியலில் கரைசேர்ந்து, கரன்ஸி மழையில் குளிப்போம் எனும் நம்பிக்கையில் பன்னீரை தலைமையேற்று ஓடிக் கொண்டிருக்கும் விசுவாசக்கூட்டம். இந்த மூன்று விசுவாசங்களுக்குமே அடிப்படையானது சுயநலமும், நன்றி மறந்த தன்மையும்தான்.

ஆனால் இவற்றை தாண்டி நான்காவதாக ஒரு விசுவாசம் இருக்கிறது. அதுதான் ஜெயலலிதாவுக்கு நன்றிக்கடன் செலுத்தியபடி நகர்ந்து கொண்டிருப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை குறைவுதான் ஆனால் இவர்களுடைய விசுவாச அழுத்தத்தின் அடர்த்தி அதிகம். இந்த லிஸ்டில் புதிதாக இணைந்திருக்கிறார் மதுரை வடக்கு தொகுதியின் எம்.எல்.ஏ.வான ராஜன் செல்லப்பா.
ஜெயலலிதா எனும் ஒற்றை பெயரால் மட்டுமே அ.தி.மு.க. ஆட்சிக்கு வர முடிந்தது, எடப்பாடியாகட்டும் அல்லது பன்னீராகட்டும் எல்லோரும் வென்றது அம்மாவல்தான். தனிப்பட்ட செல்வாக்கு என்று எவருக்கும் கிடையாது என்று போட்டுப் பொளந்திருக்கிறார் ராஜன்.

சமீபத்தில் மதுரையில் நடந்த அரசு விழாவில் ’இந்த ஆட்சி இருந்தால் என்ன? இல்லாவிட்டால்தான் என்ன!” என்று பேசி அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரை அத்தனை பேரையும் டரியலாக்கினார். பின் தனது ஹாட் பேச்சுக்கு விளக்கம் கொடுத்திருப்பவர், “எனக்கு இந்த பதவி, பந்தாவெல்லாம் அம்மா போட்ட பிச்சை. எனக்கு மட்டுமில்லை இன்று எங்கள் கட்சியின் கொடியை கட்டி கோலோச்சிக் கொண்டிருக்கும் எல்லோருக்கும் வாழ்க்கையை பிச்சையாக போட்டிருக்கிறார் அம்மா.
அப்பேர்ப்பட்ட அம்மாவின் போட்டோவை சட்டமன்றத்தில் எளிதாக திறந்துவிட முடியாத சூழல் இருக்கிறது. ராமதாஸும், இளங்கோவனும் அம்மாவின் போட்டோவை திறக்க கூடாது என்று விமர்சிக்கிறார்கள். எங்கிருந்து தைரியம் வந்தது இவர்களுக்கு? தன்னோட முதுகு நிறைய அழுக்கையும், அசிங்கத்தையும் சுமக்கும் ராமதாஸ், அம்மாவை பற்றி பேச என்ன அருகதை இருக்குது?
இவங்களையெல்லாம் இப்படி பேச விட்டபடி நம்ம ஆட்சி போயிட்டிருக்குது. அப்படியானால் இது அ.தி.மு.க. ஆட்சிதானா? இப்பேர்ப்பட்ட சூழல் இந்த ஆட்சி இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன?!
எடப்பாடியாரின் அரசு சிறப்பாகத்தான் செயல்படுகிறது. நான் அதில் குறை சொல்லவில்லை. ஆனால் நம் அரசு ஆளுகையில் நம் அம்மாவின் புகழுக்கு ஒரு விமர்சனம் வருகிறதென்றால் அதை பார்த்துக் கொண்டு சும்மா இருந்துவிட முடியுமா?
இணைப்பு இணைப்பு என்று இரு அணிகளில் ஒரு தரப்பு மட்டும் பேசிக்கொண்டே இருக்க, பன்னீர் தரப்போ அலட்சியமாக நடக்கிறது. பேச்சுவார்த்தைக்கு வராமல் இழுத்தடிக்கிறார்கள். அவர்களை தாங்க வேண்டிய அவசியமில்லை. இரண்டு அணிகளும் இணைந்தால்தான் தங்களுக்கு வாழ்க்கை என்பதை பன்னீர் அணியை சேர்ந்த மற்றவர்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள். அதனால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி இணைந்துவிடுவது நல்லது. இல்லையென்றால் சிக்கல் அவர்களுக்குத்தான்.

பன்னீர் செல்வம் என்னமோ அவருக்கு தனி செல்வாக்கு இருக்கிறதென்று நினைக்கிறார். அப்படி எதுவுமே கிடையாது. அம்மாவின் செல்வாக்கால் மட்டுமே அத்தனை பேரும் வென்றோம், ஆட்சி அமைந்தது. அம்மா இல்லையென்றால் இங்கே அரசியலில் எங்கள் யாருக்கும் வேலை இல்லை.
இதைப் புரியாமல் பன்னீர் செல்வம் காலம் கடத்திக் கொண்டே வந்தால் கூடிய சீக்கிரம் அவர்களின் ஆதரவாளர்கள் தலை தெறிக்க எடப்பாடி அணிக்கு ஓடி வந்துவிடுவார்கள். பிறகு என்றென்றைக்கும் அரசியல் அனாதையாகத்தான் பன்னீர் நிற்க வேண்டியிருக்கும்.” என்று ரகளையாக கூட்டியிருக்கிறார் ராஜன் செல்லப்பா.
