விவி மினரல்ஸ் உரிமையாளர் வைகுண்டராஜனுக்கு 3 ஆண்டு சிறை, ரூ.5 லட்சம் அபராதம்... நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!
மத்திய அரசு அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் வி.வி.மினரல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரும், தொழிலதிபருமான வைகுண்டராஜனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், அபராதமும் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விதித்துள்ளது.
மத்திய அரசு அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் வி.வி.மினரல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரும், தொழிலதிபருமான வைகுண்டராஜனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், அபராதமும் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விதித்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் திருவெம்பாலபுரத்தில், கடற்கரைப் பகுதியில் மணல் ஆலை அமைப்பதற்காக, 2012ம் ஆண்டு மத்திய சுகாதாரத்துறை இணை இயக்குநர் நீரஜ் கட்கரிக்கு, வைகுண்டராஜன் 4 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து, மத்திய அரசு அதிகாரி நீரஜ் கட்ரி, லஞ்சம் கொடுத்த வைகுண்டராஜன் மற்றும் அதற்கு உதவியதாக விவி.மினரல்ஸ் ஊழியர் சுப்புலட்சுமியும் வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டனர்.
இந்த வழக்கு கடந்த 2019ம் ஆண்டு சிபிஐயால் பதிவு செய்யப்பட்டு, டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் கடந்த 1ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், முதல் குற்றவாளியாக நீரஜ் கட்ரியும், இரண்டாவது குற்றவாளியாக வைகுண்டராஜனும், மூன்றாவது குற்றவாளியாக லஞ்சம் கொடுக்க உதவிய விவி மினரல்ஸ் ஊழியர் சுப்புலட்சுமியும், நான்காவது குற்றவாளியாக வி.வி. மினரல்ஸ் நிறுவனம் என அறிவித்த நீதிமன்றம், தண்டனை விவரங்களை பிப்ரவரி 22ம் தேதி வழங்குவதாக தெரிவித்திருந்தது.
இதன்படி வழக்கில் தண்டனை விவரங்களை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி நிர்ஜா பாட்டியா நேற்று அறிவித்தார். அதில், வைகுண்ட ராஜனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 5 லட்ச ரூபாய் அபராதமும், மத்திய அரசு அதிகாரி நீரஜ் கட்கரிக்கு 5 ஆண்டுகள் சிறையும், 5 லட்ச ரூபாய் அபராதமும், வைகுண்டராஜனின் அலுவலக உதவியாளர் சுப்புலட்சுமிக்கு 2 ஆண்டு சிறையும், 2 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.
சிபிஐ நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும், உடல்நிலையை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்கவும் வைகுண்டராஜன் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது.