இந்தியா முழுவதும் கடந்த ஜனவரி மாதம் 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக முன்களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில், இன்று முதல் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், இணை நோய்கள் கொண்ட 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. 

ஆரம்பத்தில் தடுப்பூசி மீது மக்களுக்கு இருந்த அச்சம் தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. அரசியல் கட்சி தலைவர்கள், முதலமைச்சர்கள் உள்ளிட்டோர் தடுப்பூசி செலுத்திக் கொண்டால், மக்களுக்கு அதன் மீதான நம்பிக்கை அதிகரிக்கும் என்ற கருத்துக்கள் பரவின. கொரோனாவை முற்றிலும் ஒழிப்பதற்காகவும், மக்களுக்கு தடுப்பூசி மீதான நம்பிக்கையை அதிகரிக்கும் விதமாகவும், இன்று காலை பிரதமர் மோடி தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.  டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்குச் சென்ற பிரதமர் மோடி கொரோனா தடுப்பூசிக்கான முதல் டோஸை போட்டுக்கொண்டார். 

இந்தியாவின் பாரத் பயோடேக் நிறுவனம் தயாரித்த கோவோக்சின் தடுப்பு மருத்தை பிரதமருக்கு, புதுச்சேரியைச் சேர்ந்த செவிலியர் நிவேதாவும், கேரளாவைச் சேர்ந்த செவிலியரான ரோசாமா அனில் என்பவரும் செலுத்தினர்.  பிரதமர் மோடிக்கு இன்னும் 28 நாட்களுக்குப் பிறகு இரண்டாவது டோஸ் தடுப்பு மருந்து செலுத்தப்பட உள்ளது. தற்போது பிரதமர் மோடியைத் தொடர்ந்து, சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆகியோர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.