மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் எம்.பி. பதவியை ராஜினாமா செய்து பாஜக சார்பில் அதே தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர் தேசியவாத காங்கிரஸ் கட்சியிடம் மண்ணைக் கவ்விய ருசிகரமான சம்பவம் நடைபெற்றுள்ளது. 
கடந்த மே மாதத்தில் மகாராஷ்டிராவில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் சதார் தொகுதியில் தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் உதயன்ராஜே போஸ்லே என்பவர் போட்டியிட்டார். இவர் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் குடும்பப் பரம்பரையில் வந்தவர். சதார் தொகுதியில் வெற்றி பெற்ற உதயன்ராஜே, அடுத்த சில மாதங்களில் தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். மகாராஷ்டிராவின் நலனுக்காகவும் தேசத்தின் நலனுக்காகவும் பிரதமர் மோடியுடன் இணைந்து செயல்படபோவதாக அறிவித்துவிட்டு பாஜகவில் இணைந்தார். இதனால், தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார்.
காலியாக இருந்த அந்தத் தொகுதிக்கு மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலுடன் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற்றது. பாஜக சார்பில் உதயன்ராஜே களமிறங்கினார். தேசியவாத காங்கிரஸ் சார்பில் சீனிவாஸ் தாதாசகேப் பட்டேல் போட்டியிட்டார். தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டதில், சதார் தொகுதியில் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் சீனிவாஸ் அமோக வெற்றி பெற்றார்.  உதயன்ராஜே 5.46 லட்சம் வாக்குகள் பெற்ற நிலையில், சீனிவாஸ் 6.36 வாக்குகள் பெற்று, சுமார் 90 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

 
தனது சுயநலத்தால் தேசியவாத காங்கிரஸ் எம்.பி. பதவியை ராஜினாமா செய்து, மக்களின் மீது தேர்தலை சுமத்திய உதயன்ராஜேவுக்கு மக்கள் சரியான பாடம் கற்பித்தார்கள். மேலும் இருப்பதை விட்டுவிட்டு பறப்பதற்கு ஆசைப்பட்ட உதயன்ராஜேவுக்கு சம்மடி அடி கொடுத்து மூலையில் உட்கார வைத்துவிட்டார்கள் வாக்காளர்கள். சுயநல அரசியல்வாதிகளுக்கு இந்தத் தேர்தல் முடிவு ஒரு பாடமாக அமைந்துள்ளது.