vote Rate at RK Nagar BY Election
சில வருடங்களுக்கு முன்பு வரை தமிழகத்தில் ‘ஓட்டுக்கு துட்டு’ என்பதெல்லாம் கிடையாது. ஆனாலும் சில கட்சிகள் சொம்பு, விளக்கு என்று ஏதாவது அன்பளிப்பு தருவார்கள். அதை வாங்குவதை கூட தன்மான குறைவாக கருதிக் கொண்டு மறைவாய் வாங்கிச் செல்லும் தமிழினம்.
ஆனால் கடந்த சில காலமாக தேர்தல் நடைமுறையில் ‘பணம் வழங்கல்’ என்பதும் ஒன்றாகிவிட்டது. தேர்தல் வந்தால் இவ்வளவு வேண்டும், அந்த கட்சி இவ்ளோ கொடுக்கிறாங்க! நீ எவ்ளோ தர்ற? என்று கேட்குமளவுக்கு தமிழன் துணிந்துவிட்டான்.
வரும் டிசம்பரில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் நிலையில், அந்த தொகுதி மக்கள் ‘ஓட்டுக்கான ரேட் என்ன? தேர்தல் வந்தால் என்னென்ன நடக்கும்?’ என்பது பற்றி நடத்தப்பட்ட அலசலில் சில பொதுமக்கள் வெளிப்படையாக பேசியிருக்கின்றனர். அதிர வைக்கிறது இந்த அலசல்...
“போன இடைத்தேர்தலப்ப தினகரன் ஏரியாவுக்குள்ள வந்தப்ப தெருவையே சுத்தம் பண்ணி, பிளீச்சிங் பவுடர் போட்டு கிளீனா வெச்சிருந்தாங்க. குட்நீர் பைப்பு, காவா அடைப்புன்னு எல்லாத்தையும் அவங்க கைக்காசை போட்டே சரிபண்ணி தந்தாங்க. இது போக ஒவ்வொரு ஓட்டுக்கும் செமத்தியா கவனிச்சாங்கோ! ரேட்டை வெளியில சொல்லக்கூடாதுன்னு சொல்லியிருக்காங்க.” என்றிருக்கிறார் கொருக்குப்பேடை செல்வம்.

தண்டையார்பேட்டை பாஷா “போன தபா டி.டி.வி.குரூப் அதிகமாவே கவுனிச்சுதுபா. இந்தவாட்டியும் அதுக்கு மேலே எதிர்பார்க்கிறாங்கோ மக்கள். ஒரு ஓட்டுக்கு மூவாயிரம் டூ ஐயாயிரம் கொடுத்தா செளகரியமா இருக்கும். இன்னான்றே, தருவாங்களா?” என்று கேட்டிருக்கிறார்.
சுடர் சுரேஷு “போன தபா அ.தி.மு.க. ஆளுங்க செமத்தியா அள்ளிக் கொடுத்தாங்க. இப்ப சின்னம் வேற கெடச்சிருக்கு. அத்னால கவனிப்புல ஒண்ணியும் குறையிருக்காது. தினகரன் சுயேச்சையா நின்னெல்லாம் ஜெயிக முடியாது.
எலீக்ஷன் கமிஷன் இன்னாதான் கவனமா கவுனிச்சாலும் யாருக்கு ஓட்டுங்றதை பணம்தான் நைனா தீர்மாணிக்கும்.” என்கிறார்.
இப்படியே ஆளாளுக்கு பேசிக்கொண்டே போக, ஆர்.கே.நகர் தொகுதிக்குள் பூ விற்கும் சாந்தி எனும் பெண்,
“முன்ன நாலாயிரம் ரூவா கொடுத்தாங்க. இந்தவாட்டி ஓட்டுக்கு பத்தாயிரம் கேப்போம். இம்புட்டுக்கும் நான் அ.தி.மு.க. காரிதான். ஆனா அம்மாவ எல்லாரும் சேந்து கொலை பண்ணிட்டாங்க. இப்ப ஆள்றது கொள்ளை கும்பல்தானே.” என தாக்கியிருக்கிறார்.
ஆக மொத்தத்தில் ஆர்.கே.நகர்வாசிகளில் கணிசமான பேர் இந்த இடைத்தேர்தலை வெச்சு மறுபடியும் ஒரு தீபாவளி கொண்டாட முடிவெடுத்துவிட்டார்கள் என்றே தோண்றுகிறது.
