சட்டப்பேரவையில் இன்று நடைபெற உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் 9 வாக்குகளில் தமிழக முதலமைச்சர் யார் என்பது தெரியும். அதன்பிறகு, ஓ.பன்னீர்செல்வம் ஆட்சி அமைப்பாரா, எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி அமைப்பாரா என்பது முடிவுக்கு வரும்.
கடந்த 5ம் தேதி ஒ.பன்னீர்செல்வம் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து சசிகலா முதலமைச்சராக அறிவிக்கப்பட்டார். இதற்கு ஒ.பி.எஸ். எதிர்ப்பு தெரிவித்தார். இதனால், அதிமுகவில் பிளவு ஏற்பட்டு, இரு அணிகளாக உள்ளன.
ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்து, எம்எல்ஏக்கள், எம்பிக்கள் திரண்டு வந்தனர். அதே நேரத்தில், சசிகலாவுக்கு ஆதரவாக உள்ள எம்எல்ஏக்கள், ஓ.பன்னீர்செல்வம் பக்கம் செல்லாமல் இருக்க, அவர்களை கிழக்கு கடற்கரை சாலை கூவத்தூரில் உள்ள தனியார் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில் சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்றார். இதனால், எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சராக அறிவித்தனர். இதைதொடர்ந்து அவருக்கு, கவர்னர் வித்யாசாகர் ராவ் பதவி பிரமாணம் செய்து வைத்தார். பதவி பிரமாணம் முடிந்ததும் கவர்னர், எம்எல்ஏக்களின் ஆதரவை நிரூபிக்க 15 நாள் அவகாசம் கொடுத்தார். இந்நிலையில், முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமி தனிப்பெரும்பான்மையை நிரூபிக்க இன்று காலை 11 மணிக்கு சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடப்பு நடப்பதாக அறிவிக்கப்பட்டது. சட்டப்பேரவை தொடங்கியதும், எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை கோரும் தீர்மானத்தை கொண்டு வருவார்.
தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின், காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவர் ராமசாமி, மற்றும் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அணியினர் பேசுவார்கள். அதனபின்னர், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும்.
எடப்பாடி பழனிச்சாமி தலைமையில், ஆட்சி அமைக்க 117 எம்எல்ஏக்கள் ஆதரவளிக்க வேண்டும். இதில், 9 பேரின் வாக்களிப்பில் மட்டுமே இ.பி.எஸ்சின். ஆட்சி அமைந்துள்ளது. இதனால், தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
தமிழக சட்டமன்ற தொகுதிகள் 236. ஜெயலலிதா இறந்துவிட்டதாலும், சபாநாயகராக தனபால் இருப்பதாலும் 232 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதில் 50 சதவீதத்துக்கு மேற்பட்ட எம்எல்ஏக்களின் ஆதரவை பெறுபவரே முதலமைச்சராக பொறுப்பேற்க முடியும்.
தற்போது, சபாநாயகர் தனபாலையும் சேர்த்து 135 உறுப்பினர்கள் பலம் உள்ளது. இதில் எடப்பாடி பழனிச்சாமிக்கு 124 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாக பட்டியல் தயாரித்து, கவர்னரிடம் கொடுத்தார். இதேபோல் பன்னீர்செல்வம் அணியில், சபாநாயகரை தவிர்த்து, ஓ.பி.எஸ். உள்பட 11 எம்எல்ஏக்கள் உள்ளனர்.
இதனால், பழனிச்சாமி அணியில் உள்ள 7 எம்எல்ஏக்கள், எதிராக திரும்பினாலும் ஆட்சி கலைக்கப்படும் நிலையில் உள்ளது.
நம்பிக்கை வாக்கெடுப்பில் இரு அணிகளும் ஒரே அளவில் எம்எல்ஏக்களை வைத்திருந்தால், சபாநாயகரும் வாக்களிக்க வேண்டும். அவர், அரசு சார்பாகவும், எதிர் அணி சார்பாகவும் வாக்களிக்க உரிமை உண்டு. ஆனால், தற்போது சபாநாயகராக உள்ள தனபால், சசிகலாகவின் ஆதரவாளர் என்பதால், எடப்பாடி பழனிச்சாமிக்கே வாக்களிக்க கூடும்.
இதற்கிடையில், கூவத்தூர் ரிசார்ட்டில் கடந்த 10 நட்களுக்கு மேலாக தங்கி, சசிகலா தரப்பில் இருந்த கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அருண்குமார், முதல்வர் பழனிசாமிக்கு ஆதரவாக வாக்களிக்க விருப்பமில்லை என்று கூறி வீட்டுக்கு திரும்பி சென்றுவிட்டார்.
எனவே, 117 எம்எல்ஏக்கள் தீர்மானத்தை ஆதரித்தால், அரசு பெரும்பான்மையை நிரூபித்ததாக அறிவிக்கப்படும். எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவிக்க விருப்பம் இல்லாமல் திரும்பி சென்றாலோ, ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்தாலோ ஆட்சி கவிழ்ந்துவிடும் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு, 28 ஆண்டுகள் கழித்து தமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
