மக்களவையில் பாஜக அரசுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஆதரவாக 4 அதிமுக எம்.பிக்கள் வாக்களித்திருப்பது தற்போது அம்பலமாகியுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள கட்சித் தலைமை அவர்கள் யார்? யார்? என கண்டுபிடிக்க ரகசிய விசாரணைக்கு  உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது.

மத்தியில் ஆளும் பாஜக அரசு மீது தெலுங்கு தேசம் கட்சியின் சார்பில் கடந்த வெள்ளிக் கிழமை நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதன் மீது கிட்டத்தட்ட 11 மணி நேரத்துக்கு மேலாக விவாதம் நடைபெற்றது. இதையடுத்து நடைபெற்ற வாக்கெடுப்பில்  தீர்மானத்துக்கு எதிராக 325 வாக்குகளும், ஆதரவாக 126 வாக்குகளும் கிடைத்தன. இதையடுத்து பாஜக வெற்றி பெற்றது.

ஆனால் இந்த  நம்பிக்கையில்லா தீர்மானத்தையொட்டி நடந்த வாக்கெடுப்பில் எதிர்கட்சிகளை சேர்ந்த பல எம்.பிக்கள் வாக்களிக்காத விவரம் தற்போது வெளியாகியுள்ளது. மத்திய அரசுக்கு ஆதரவாக அதிமுக வாக்களித்த நிலையில், அக்கட்சியைச் சேர்ந்த 4 எம்.பிக்கள் வாக்களிக்கவில்லை என கூறப்படுகிறது.

நம்பிக்கையில்லா தீர்மானத்தை தோற்கடித்து பாஜக வெற்றி பெறும் என்பது எதிர்பார்க்கப்பட்ட ஒன்று தான் என்றாலும், வாக்கெடுப்பில் எதிர்கட்சிகளுக்கு மொத்தம் கிடைத்திருக்க வேண்டிய வாக்குகளை விடவும் குறைவான வாக்குகளே கிடைத்துள்ளன.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மொத்தம் 312 எம்.பிக்கள் உள்ளனர். சிவசேனா வெளி நடப்பு செய்ததால் அதன் 18 எம்.பிகள் வாக்களிக்கவில்லை. எனவே 294 எம்.பிக்கள் மட்டுமே இருந்தனர். அதிமுகவின் 37 பேரையும் சேர்த்தால் மொத்தம் 331 வாக்குகள் ஆளும் கூட்டணிக்கு கிடைத்திருக்க வேண்டும். ஆனால் 325 வாக்குகள் மட்டுமே கிடைத்தன.

ஆனால் பாஜக எம்.பி விர்தல் ராட்டியா உடல் நிலை மிகவும் மோசமாக இருந்ததால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதனால் அவர் வாக்களிக்கவில்லை. அதுபோலவே கீர்த்தி ஆசாத் வெளிநாடு சென்றிருப்பதால் அவரும் வாக்களிக்கவில்லை.

இவர்களை தவிர அதிமுகவை சேர்ந்த 4 எம்.பிக்கள் வாக்களிக்கவில்லை என்பதால் தான் பாஜகவுக்கு 325 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளதாக தெரிகிறது. ஆக 4 அதிமுக எம்.பி.க்கள் பாஜகவுக்கு எதிராக வாக்களித்துள்ளனர். இது அதிமுக தலைமைக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ரகசியமாக விசாரணை நடத்தும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தைல் அதிமுக மீது பாஜக கடும் கோபத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அந்த 4 கறுப்பு ஆடுகள் யார்? யார்? என்பது விரைவில் தெரியவரும்.