அன்று 1980 ஜூலை 20-ம் தேதி! மதுரை ஜான்ஸிராணி பூங்காவே கறுப்பு சிவப்பு வர்ணமாகியிருந்தது. எங்கெங்கும் தி.மு.கழக இளைஞர் பட்டாளம். காரணம்? அன்றுதான் பிற்காலத்தில் அக்கட்சியின் முதுகெழும்பாக மாற இருக்கிற ‘தி.மு.க. இளைஞர் அணி’ உதயமாக இருக்கும் நாள். ஜனக்கடலுக்கு நடுவில் வியர்வை கடலாக நின்று சுற்றிச் சுழலுகிறார் ஸ்டாலின். 

இந்த அணியை துவக்கி வைப்பதற்காக கருணாநிதி மேடைக்கு வந்துவிட்டார். அவர் காதில் கோ.சி.மணி ஏதோ கிசுகிசுக்க, ஸ்டாலினை அழைத்தார் கருணாநிதி. பரபரப்பாய் அருகில் வந்து நின்ற ஸ்டாலினிடம் ”தம்பி! நிர்வாக உச்சத்துல இருக்கிற நீ சில சூட்சமங்கள தெரிஞ்சி வெச்சிருக்கணும். கீழ் நிலை நிர்வாகிகள்ட்ட அடிக்கடி புகார்களை வாங்ககூடாது. அப்படி வாங்கிட்டா தீர விசாரிச்சு நடவடிக்கை எடுக்கணும். அப்படி செய்யலேன்னா அது உன் மேலே இருக்கிற நம்பகத்தன்மையை சரிச்சுடும்.” என்றார். ஸ்டாலினோ புதிராக முழித்தார். 

இது நிகழ்ந்து சுமார் முப்பத்து எட்டு ஆண்டுகள் கழிச்சு தலைவருமான தகப்பன் சொன்னதன் அர்த்தம் இப்போதுதான் வலுவாக புரிகிறது ஸ்டாலினுக்கு! மனிதர் நொந்து நிற்கிறார்!
என்ன பிரச்னை?...

கடந்த சட்டமன்ற தேர்தல் அதிர்வுகள் துவங்கியது. 2011-ல் தி.மு.க. அரசுக்கு எதிராக இருந்த அலை ஏதும் 2016-ல் இல்லை. ஆனாலும் தில்லாக களமிறங்கினார் ஸ்டாலின். வழக்கமான வேட்டி அரசியலை தூக்கி ஏறக்கட்டிவிட்டு ‘நமக்கு நாமே!’ என்று நடந்தார். கன்னியாகுமரில் ஆட்டோவில் தொங்கினார், நெல்லையில் பஸ் பயண பெண்களுக்கு கைகொடுத்தார், மதுரையில் சாலையோர டீக்கடையில் சாயா அடித்தார்! ‘எல்லாம் நாடகம்! நாடகம்!’ என்றது ஆளுங்கட்சி. ஸ்டாலினின் இந்த விளையாடல்கள் எதுவும் என்னிடம் செல்லாது! என்று இறுமாப்பில் திளைத்தார் ஜெயலலிதா. ஆனால் ரிசல்ட் இரு தரப்பையும் அதிர வைத்தது. 89 எம்.எல்.ஏ.க்களை பெற்று விஸ்வரூப எதிர்கட்சியாக தி.மு.க. வந்து நின்றது. கொங்கு மண்டலம் மட்டும் அ.தி.மு.க.வுக்கு கை கொடுக்கவில்லையென்றால் தொங்கு சட்டமன்றத்தில் ஜெயலலிதாவின் தனிப்பெரும் மரியாதை தள்ளாட்டம் கண்டிருக்கும்.  கூட்டணி கட்சியான காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களையும் இழுத்தபடி ஸ்டாலின் மிரட்ட, பார்டரில் தப்பியது ஜெயலலிதாவின் ஆட்சி. 

இன்னும் 4 வருடங்களுக்கு வேலையே இல்லை! என்று தி.மு.க.வினர் நினைத்த போதுதான் ஜெயலலிதாவின் சரிவும், சாவும் சூழலை புரட்டிப் போட்டன. ஸ்டாலின் நிச்சயம் ஆட்சியை கலைப்பார், அரியணையை பிடிப்பார்! என்று தி.மு.க. மட்டுமல்ல அ.தி.மு.க.வினரே நம்பியபோது ‘பின்வாசல் வழியே ஆட்சியை பிடிக்கும் பழக்கம் எங்களுக்கு இல்லை. மக்களின் அபிமானத்தை பெற்றே ஆட்சிக்கு வருவோம்.’ என்று காரணம் சொல்லிவிட்டு ’இன்னும் 2 மாதங்களில் இந்த ஆட்சி தானாக கலையும்’ என்று கடந்த ஒரு வருடங்களாகப் பேசிக் கொண்டிருக்கிறார். 

இந்த சூழலில்தான் 2ஜி வழக்கில் தி.மு.க.வுக்கு சாதகமான தீர்ப்பு, நெருங்கி வரும் நாடாளுமன்ற தேர்தல், எப்போது வேண்டுமானாலும் வரும் உள்ளாட்சி தேர்தல், பன்னீர் அணி மற்றும் தினகரன் அணி எம்.எல்.ஏ.க்களின் சட்டமன்ற நடத்தை தொடர்பான வழக்கில் தீர்ப்பு என்று அசாதாரண சூழல்கள் ஸ்டாலினை உசுப்பி எழுப்பின. எப்போது வேண்டுமானாலும் சட்டமன்ற சூழல் வந்தாலும் வரலாம் எனும் பேச்சு இருப்பதால், தன் உட்கட்சியை சற்றே உற்று நோக்கிப் பார்த்தார் ஸ்டாலின். உள் மோதலால் ஏகப்பட்ட சண்டைகள், காயங்கள், பஞ்சர்கள்.
முதலில் நம்மை சரி பண்ணுவோம்! என்றபடியே உட்கட்சி பஞ்சாயத்து பேசுவதற்காக ‘கள ஆய்வு’ எனும் நிகழ்வை அறிவித்தார். இதன்படி மாவட்ட வாரியாக தி.மு.க.வினரை சந்தித்து அவர்களுக்குள் இருக்கிற மோதல்கள், பிரச்னைகள், குறைகள், ஆதங்கங்கள் ஆகியவற்றை கேட்டறிய முடிவெடுத்தார். இதை டிஸைன் செய்தது, அதே ‘நமக்கு நாமே’ டீம்தான்.

இந்நிலையில் கட்சியில் இல்லாத ஆனால் அரசியல் அனுபவம் மிக்க, நலம் விரும்பி ஒருவர் ”வெளிப்படையாக நிர்வாகிகள் எல்லா குறைகளையும் சொல்லிவிட மாட்டார்கள். மிக நுணுக்கமான, தீவிரமான பிரச்னைகள் இருக்கலாம். அதை வெளிப்படையாக பகிர்ந்தால் பிரச்னைகள் மேலும் அதிகமாகும். எனவே அதை தெரிந்து கொள்ள ’புகார் பெட்டி’ டைப்பில் எதையாவது வையுங்கள். இதன் மூலம் கட்சியின் பிரச்னைகளும் தெரியவரும், உட்கட்சி மோதலும் தவிர்க்கப்படும்.” என்றார். இதை அப்படியே ஏற்றுதான் ‘தீர்வு காணும் பெட்டி’ வைக்கப்பட்டது. 

இதன் மூலம் ‘மனு நீதி சோழன்’ ரேஞ்சுக்கு கட்சியில் அடக்கு முறைக்கு ஆளாக்கப்பட்டோர் ஸ்டாலினை  போற்றினர். 

கள ஆய்வும் துவங்கியது. முதலில், கட்சி அநியாயத்துக்கு வீக் ஆகி கிடக்கும் கோயமுத்தூர் மாவட்டத்திலிருந்து கட்சியினரை சந்திப்பதை துவக்கினார். ஸ்டாலின் எதிர்பார்த்ததை விட மிக மோசமாக கட்சியின் உள் ஆரோக்கியம் துருவேறிக் கிடப்பது புலனாகியது. உள் மோதல்கள் ஏதோ புற்று நோய் போல் புரையேறிக் கிடப்பது தெளிவாகி இருக்கிறது. மாவட்ட செயலாளர்கள், நகர செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் போன்றோ சிற்றரசர்களாக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆட்டமாய் ஆடுவதை கழக கீழ்நிலை நிர்வாகிகளின் வாயிலாகவே தெரிந்து கொண்டார். தளபதி இருக்கும் தைரியத்தில் தங்களை அடக்கும் நிர்வாகிகளை பற்றி வெளிப்படையாக போட்டுடைத்தனர் ஊராட்சி செயலாளர்கள் போன்ற கீழ் நிலை நிர்வாகிகள். இது போதாதென்று ’தீர்வு காணும் பெட்டி’யின் கழுத்து திணற திணற புகார் கடிதங்கள் குவிந்தன. 

ஸ்டாலின் சொன்னபடியே, பெறப்பட்ட புகார்கள் குறித்து விசாரிக்க அவரால் அமைக்கப்பட்ட கழக வழக்கறிஞர்கள் அடங்கிய படை மாவட்டங்களுக்கு கிளம்பியது. கோயமுத்தூர் முடிந்து திருப்பூர் கழக நிர்வாகிகளை ஸ்டாலின் சந்திக்கும் முன்பாக கோயமுத்தூரில் வந்திறங்கியது விசாரணை படை. கீழ் நிலை நிர்வாகிகளும், தொண்டர்களும் ‘என்னா ஸ்பீடுடா! தளபதி இந்த வாட்டி களைச்செடிகளை தூக்கி கடாசிடுவாரு. நல்லவன் நிர்வாகியாவான், கட்சி வளரும், ஆட்சியை பிடிப்போம், நாமும் செழிப்போம்.’ என்று நம்பினார்கள். 
ஆனால் நடந்து கொண்டிருப்பதோ தலைகீழ். கிணற்றில் போடப்பட்ட கல்லாக கிடக்கின்றன புகார் விசாரணை குறித்த நடவடிக்கைகள். எதிலும் எந்த மாற்றமும் இல்லை. அறிவாலயத்தில் எல்லாவற்றுக்கும் லஞ்சம் விளையாடுகிறது, பெரும் செல்வந்தர்களாக இருக்கும் நிர்வாகிகள், அறிவாலயத்தின் உச்ச நிலை பணியாளர்களை விலைக்கு வாங்கி வைத்துள்ளார்கள், இதனால் எந்த புகாரும் ஸ்டாலினின் கவனத்துக்கு போவதில்லை என்பது பற்றியெல்லாம் புகார்கள் குவிந்திருக்கின்றன. அட! அதன் மீதாவது நடவடிக்கை எடுத்து, தான் சொல்லிய சொல்லை காப்பாற்றி இருக்கலாம் ஸ்டாலின். அதுவும் நடக்கவில்லை. அறிவாலயத்தை லஞ்சம் ஆட்டி வைக்கும் அவலம் இன்னமும் தொடரத்தான் செய்கிறது என்று வெளிப்படையாகவே புகார்கள்.

எப்பவோ விசாரணை முடிவு பெற்ற கோயமுத்தூர், திருப்பூர் மாவட்டங்களில் நிர்வாகிகளின் ஆட்டம் பழைய மாதிரியே தொடர்கிறது. எதிலும் எந்த மாற்றமுமில்லை. இதனால் அந்த மாவட்டங்களில் ஸ்டாலின் மீது பெரும் அதிருப்தியும், சலிப்பும், விரக்தியும் கொள்ள ஆரம்பித்துவிட்டனர் தொண்டர்களும், கீழ் நிலை நிர்வாகிகளும். 

இந்த சலிப்பு ‘ப்ச்ச்! ஒண்ணும் நடக்காதுய்யா’ எனும் வார்த்தை மூலம் தமிழகம் முழுக்க தி.மு.க.வில் பரவிவிட்டது. விரக்தியின் விளிம்புக்கு போய்விட்டனர் தொண்டர்கள். மாவட்ட ஆய்வின் போது ‘ஜெயலலிதா போல் சர்வாதிகாரத்தை கையிலெடுப்பேன்.’ என்று ஸ்டாலின் மிரட்டியதெல்லாம் ‘ஏ நல்லா பாரு! நானும் ரெளடிதான்.’ என்பது போல் நக்கலாக பார்க்கப்பட துவங்கிவிட்டது அவரது கட்சியினரால். 

தன் குறைகளை களைவார் என்று கடவுளிடம் சொல்லி அழுகிறான் பக்தன், நெடுநாள் ஆகியும் கடவுள் அதை தீர்க்கவில்லை. மாறாக பிரச்னை ஓவராகிக் கொண்டே போகிறது. இதனால் விரக்தியின் விளிம்புக்கு செல்லும் பக்தன், கடவுள் போட்டோவை தூக்கி வெளியில் எறிந்து உடைப்பான். பின், வேற்று மத கடவுளாவது கைகொடுப்பாரா? என்று அவரை நாடிச் செல்வான். 

இதே லாஜிக்தான் இப்போது தி.மு.க.வை போட்டு ஆட்டுகிறது. கட்சியில் பதவியிலிருந்தபடி ஆட்டம் போடுபவர்களையும், வாரிசு அரசியல் செய்து கொண்டிருப்பவர்களையும் ஸ்டாலின் தடுக்க இன்னும் முயலாத காரணத்தினால் அவர் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டனர் பல லட்சக்கணக்கான தொண்டர்களும், பல்லாயிரம் கீழ் நிலை நிர்வாகிகளும்! என்று உளவுத்துறை கணிக்கிறது. இதன் விளைவாக கட்சி மீதான பற்றை இழக்கிறார்கள் பலர், பலரோ அடுத்த கட்சிக்கு சென்றால் நமக்கு நல்லது நடக்குமா? என்று அலைபாய துவங்கிவிட்டனர். இதனால் பெருமளவு ஆதாயப்படுவது டி.டி.வி. தினகரன் தான். காரணம் தற்போதைக்கும் பெரும் செல்வாக்குடன் வலம் வருவது அவர்தான். 

தொண்டர்கள் மற்றும் கீழ் நிலை நிர்வாகிகளிடம் ஏற்பட்டிருக்கும் இந்த மன தொய்வு தேர்தல் பணிகளில் மிக கடுமையாய் எதிரொலித்து கழக வெற்றியை பாதிக்கும் என்று கலங்குகிறார்கள் சீனியர்கள். “தளபதி நல்லவர்தான். ஆனால் அரசியலுக்கு, அதுவும் இன்னைக்கு நடக்கும் அரசியலுக்கு நல்லவனா இருந்தால் மட்டும் போதாது பராக்கிரம வல்லவனாகவும் இருக்கணுமே! அதை தளபதி யோசிக்க மாட்டேங்கிறாரே!’ என்று கண்ணீர் விடாத குறையாய் கரைகிறார்கள். 
மொத்தத்தில் அறிவாலயத்தின் அரசியல் விரக்தியால் வெளிறிக் கொண்டிருக்கிறது.