எத்தகைய சோதனையான நேரத்திலும் நெஞ்சுரம் கொண்டு தைரியமாக பிரச்சனையை எதிர்கொள்பவர் ஜெயலலிதா என்றும் அவரைப் போல ஆளுமைத் திறன் மிக்கவர் யாருமில்லை என்றும் ஜெயலலிதாவுக்கு முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வதாதன் புகழாரம் சூட்டினார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் அன்று தீர்ப்பு…பெங்களூரு சிறை வளாகத்தில் அனைவரும் திக்..திக்..மனநிலையுடன் காத்திருக்கின்றனர்..நீதிபதி குன்ஹா ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை விதிக்கிறார்..கோர்ட் வளாகத்துக்குள் இருந்த ஜெயலலிதா என்னையும், அண்ணன் ஓபிஎஸ்ஐயும் அழைக்கிறார்…அருகில் சசிகலாவும், இளவரசியும் உள்ளனர்…ஜெயலலிதாவைப்  பார்த்ததும் நானும், ஓபிஎஸ்ம் கதறி அழத் தொடங்கினோம்..

சிறிது நேரம் அமைதியாக இருந்த இருந்த ஜெயலலிதா எங்கள் இருவரையும் பார்த்து எதற்காக அழுகிறீர்கள்..இந்த மாதிரி நேரத்தில்தான் நாம் தைரியமாக இருக்க வேண்டும் என குரலில் கடுமை காட்டினார்…அரசியலில் இதையெல்லாம் சகஜமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சொன்ன ஜெயலலிதா உடனடியாக அடுத்தடுத்து கட்டளைகளை பிறப்பிக்கத் தொடங்கினார்.

ஓபிஎஸ் உங்களை சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்ந்தெடுப்பதற்கான பணியைத் தொடங்குங்கள்…நீங்கள் முதலமைச்சராக பதவியேற்றுக் கொள்ளுங்கள்..அரசுப் பணிகளில் எந்தத் தொய்வும் ஏற்படக் கூடாது என அந்த இக்கட்டான நேரத்திலும் கடமைகளை முறையாக செய்ததைப் பார்த்ததும் நாங்கள் அப்படியே அசந்துவிட்டோம்…

இப்படி ஜெயலலிதாவின் ஆளுமைத் தன்மை குறித்து முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் வியந்து பாராட்டு தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், அப்போது ஓபிஎஸ்ஐ முதலமைச்சராக அறிவித்தபோதுகூட, சசிகலாவிடம் இது குறித்து சின்னதாகக் கூட விவாதிக்கவில்லை என தெரிவித்த நத்தம் விஸ்வநாதன், ஜெயலலிதாவின் ஒரே சாய்ஸ் ஓபிஎஸ்தான் என கூறினார்.