vishal replies to minister anbazhagan

பிக்பாஸில் பல்வேறு சர்ச்சைகள் இருந்தாலும் நன்மை இருந்தால் மட்டுமே கமலஹாசன் இறங்குவார் எனவும் அவரை ஒருமையில் பேசியதை அமைச்சர் அன்பழகன் தவிர்த்திருக்கலாம் எனவும் தெரிவித்தார்.

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ் கலாச்சாரத்தை அழிப்பதாகவும், நிகழ்ச்சியை தடை செய்து கமல் உள்ளிட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும் எனவும் இந்து அமைப்பு புகார் அளித்துள்ளது.

நிகழ்ச்சி குறித்து, நடிகர் கமல் ஹாசன் விளக்கமளிக்கும் வகையில், பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில், தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல் உள்ளதாக கூறியிருந்தார்.

இதைதொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் கமலஹாசன் ஒரு ஆளே கிடையாது எனவும், அவனுக்கெல்லாம் நான் பதில் சொல்ல முடியாது எனவும் ஒருமையில் பேட்டியளித்தார்.

இதுகுறித்து செய்தியாளர்கள் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷாலிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், நன்மை இருந்தால் மட்டுமே கமலஹாசன் ஒரு விஷயத்தில் இறங்குவார் எனவும், அவரை ஒருமையில் பேசியதை அமைச்சர் அன்பழகன் தவிர்த்திருக்கலாம் எனவும் தெரிவித்தார்.