சென்னை தி.நகரில் உள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தின் பூட்டை உடைக்க வந்த தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்பட்டார். விஷால் மீது சட்டவிரோதமாக கூட்டத்தைக்கூட்டுதல், பிரச்சனைக்குரிய சொத்துகள் குறித்து தகராறில் ஈடுபட்டு அமைதியை குலைத்தல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் சென்னை பாண்டிபஜார் காவல்நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.  

பெரிய பட்ஜெட் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு மட்டும் ஆதரவாக விஷால் பாரபட்சமாக செயல்படுகிறார். தயாரிப்பாளர் சங்கத்துக்கு என்று வைப்புநிதியான அந்த 7.85 கோடி ரூபாய்க்கு கணக்கு காட்டவில்லை என எதிர் தரப்பினர் குற்றம்சாட்டினார். தமிழ் ராக்கர்ஸில் விஷாலுக்கு பங்கு உள்ளது என்றும், கிரிமினல் செயல்களில் அவர் ஈடுபடுகிறார். சங்க நிர்வாகிகள் 150 பேரை நீக்கியிருக்கிறார். தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்துக்கு என்று பதிவுத்துறை அலுவலகம் ஒன்று உண்டு. ஆனால், விஷால் தலைவராகப் பொறுப்பேற்றதும் புதிதாக ஒரு கட்டடம் வாடகைக்கு எடுக்கப்பட்டு அலுவலகம் அங்கே நடைபெறுகிறது. இதற்கு முன்பாக நடந்த பொதுக்குழுவில் கேள்வி கேட்டதற்கு எந்த பதிலும் சொல்லவில்லை. இரண்டு வருடங்கள் ஆகியும் பொதுக்குழுவை கூட்டவில்லை என்று அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை கூறி, ஒரு அணியினர் நேற்று திடீரென தியாகராயர் நகரில் உள்ள சங்க அலுவலகத்தை பூட்டினர். 

இதனையடுத்து, நடிகர் விஷால் தரப்பில் இது குறித்து பாண்டிபஜார் காவல்நிலையத்தில் புகார் கூறப்பட்டது. புகார் குறித்த விசாரணை நிலுவையில் இருக்கும் நிலையில், இன்று காலையில் விஷால் தனது ஆதரவாளர்களூடன் தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தின் பூட்டை உடைக்க முயன்றார். இதனால் விஷால் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டார். 

இந்நிலையில் இன்று மாலையில், சட்டவிரோதமாக கூடுதல், பிரச்சனைக்குரிய சொத்துகள் குறித்து தகராறில் ஈடுபட்டு அமைதியை குலைத்தல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் விஷால் மீது சென்னை பாண்டிபஜார் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.