’96 படத்துக்கு விஜய்சேதுபதியிடமிருந்து அடாவடியாக பணம் வசூலித்த குற்றச்சாட்டு அவரது இமேஜை வலுவாக டேமேஜ் செய்திருக்கும் நிலையில், லிங்குசாமி இயக்கத்தில் இவர் நடித்திருக்கும்’சண்டக்கோழி2’ படம் வரும் 18ம் தேதி ரிலீஸாகிறது. இந்த ரிலீஸை ஒட்டி இன்னொரு தலைபோகிற பிரச்சினை விஷாலை நோக்கி வீறுநடைபோட்டு வருகிறது.

’மனுஷனா நீ’ படத்தின் தயாரிப்பாளர் கஸாலி விஷாலுக்கு இன்று ஒரு பகிரங்க கடிதம் எழுதியிருக்கிறார். அதைப்படித்தால் விஷாலுக்கு காத்திருக்கும் வில்லங்கம் புரியும்

விஷாலுக்கு ஒரு விண்ணப்பம்!

தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவரான உங்களது 'சண்டக்கோழி டூ' திரைப்படம் இந்த அக்டோபர் 18 - ஆம் தேதி ரிலீஸாகப் போகிறது.

படம் எல்லா சாதனைகளையும் தாண்டி வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துகள். நம் தயாரிப்புத் தொழிலைப் பாழ்படுத்துவது தியேட்டர் பைரஸி. உங்களுக்கு நன்றாகவே தெரியும்.

உங்கள் தலைமையில் இயங்கும் தயாரிப்பாளர்கள் சங்கம் ஏற்கனவே ஒரு முடிவு எடுத்திருக்கிறது: 'பைரஸி சம்பந்தப்பட்ட திருட்டுத் தியேட்டர்களுக்கு யாரும் படம் கொடுக்கக் கூடாது' என்று.

சிலர் சம்மதித்தார்கள். சிலரால் விநியோகஸ்தர்களை மீறி செயல்பட முடியவில்லை. ஆனால்...  நீங்கள் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர். உங்கள் பேச்சை நீங்கள் கேட்பதில் தடையேதும் இல்லை.

... சண்டக்கோழி டூ படத்தின் தயாரிப்பாளர் நீங்கள். யாருக்குக் கொடுக்க வேண்டும், யாருக்குக் கொடுக்கக் கூடாது என்ற உரிமை, முடிவு உங்கள் கையில். எனவே, தவறு செய்து மாட்டிக் கொண்ட திருட்டுத் தியேட்டர்களுக்குப் படத்தைக் கொடுக்காமல் நிராகரிப்பது உங்கள் கையில். 

கீழ்க்கண்டவை திருட்டுத் தியேட்டர்களாக அறியப்பட்டவை:

திருட்டுத்தனமாக பைரஸி எடுக்கப்பட்ட தியேட்டர்கள்:

1. கிருஷ்ணகிரி முருகன் .. மனுசனா நீ

2. கிருஷ்ணகிரி நயன்தாரா .. கோலிசோடா டூ

3. மயிலாடுதுறை கோமதி .. ஒரு குப்பைக் கதை

4. கரூர் எல்லோரா .. ஒரு குப்பைக் கதை

5. ஆரணி சேத்பட் பத்மாவதி .. மிஸ்டர் சந்திரமௌலி

6. கரூர் கவிதாலயா .. தொட்ரா

7. கரூர் கவிதாலயா .. ராஜா ரங்குஸ்கி
 
8. பெங்களூரு சத்யம் .. இமைக்கா நொடிகள்

9. விருத்தாசலம் தியேட்டர் .. சீமராஜா

10. மங்களூர் சினிபொலிஸ் .. சீமராஜா.

இந்தத் தியேட்டர்களுக்கு உங்கள் படத்தைக் கொடுக்காமல், பைரஸிக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஊக்கம் கொடுத்து ஆதரவளிக்கும்படி பாதிக்கப்பட்ட அனைத்துத் தயாரிப்பாளர்கள் சார்பாக வேண்டுகோள் வைக்கிறேன்.நன்றி!

... கஸாலி.

இப்படி ஒரு சிக்கலான சூழலை விஷால் எப்படி எதிர்கொள்கிறார் என்று பார்ப்போம்.