கடந்த 28 ஆம் தேதி சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள பிரியாணிக்கடை மீது திமுகவினர் சிலர் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அந்த கடைக்கு நேரில் சென்ற திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், கடை உரிமையாளர் மற்றும் தாக்குதலுக்கு ஆளானவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

சென்னை விருகம்பாக்கத்தில் பிரியாணி கடை நடத்தி வருபவர் தமிழ்ச்செல்வன். இவரது தம்பி பிரகாஷ் கடையை நிர்வகித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 28-ந் தேதி இரவு உணவுகள் தீர்ந்து போனதால் கடையின் முன்பக்கத்தில் உள்ள ஒரு ‘ஷட்டரை’ சாத்தி விட்டு கணக்கு பார்த்துக்கொண்டு இருந்தனர். அப்போது விருகம்பாக்கம் தி.மு.க. நிர்வாகி பாக்சர் யுவராஜ் தலைமையில் வந்த 10-க்கும் மேற்பட்டோர் கடைக்குள் சென்று பிரகாசிடம் சாப்பிட பிரியாணி வேண்டும் என்று கேட்டனர்.அவரோ நேரம் ஆகிவிட்டதால் உணவுகள் தீர்ந்துவிட்டன, என்று கூறினார். அதைக்கேட்டு ஆத்திரம் அடைந்த பாக்சர் யுவராஜ் , நான் லோக்கல் ஆளு எனக்கே பிரியாணி இல்லையா? என்று கேட்டு அங்கு இருந்த பொருட்களை கைகளால் தள்ளிவிட்டார்.

அப்போது கடை ஊழியர்கள் 2 பேர், ஏன் பிரச்சினை செய்கிறீர்கள்?  என்று கேட்டனர். இதில் மேலும் ஆத்திரம் அடைந்த பாக்சர் யுவராஜ் தனது ஆதரவாளர்களுடன் தனக்கே உரிய ‘பாக்சிங்’ ஸ்டைலில் பிரகாஷின் முகத்தில் ஓங்கி குத்துவிட்டார்.

இதில் பிரகாசின் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வடிந்தது. இதனை தடுக்க வந்த ஊழியர்களையும் அவரது ஆதரவாளர்கள் அடித்துத் துவைத்தனர். இதில் படுகாயம் அடைந்த பிரகாஷ் உள்ளிட்ட  3 பேரும் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவிட்டு விருகம்பாக்கம் போலீசில் புகார் அளித்தனர். இந்த  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல் திமுக விற்கு பெரும் இழுக்கை தேடித் தந்தது. நெட்டிசன்கள் திமுகவை கலாய்த்து பதவிவுகளை போட்டனர்.

இதையடுத்து பிரியாணி கடை ஊழியர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய யுவராஜ், திவாகரன் ஆகியோர் மீது தி.மு.க. தலைமை ஒழுங்கு நடவடிக்கை எடுத்து உள்ளது. அவர்கள் இருவரும் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர்.

இந்நிலையில் விருகம்பாக்கம் ஆர்.ஆர். பிரியாணிக் கடைக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சென்றார். அந்த கடைக்குச் சென்ற அவர், உரிமையாளர் மற்றும் தாக்குதலுக்கு ஆளான கடை ஊழியர்கள் ஆகியோரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

மேலும் அன்று நடந்தது குறித்து அவர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் இனி மேல் இது போன்ற சம்பவங்கள் நடக்காது என்று உறுதியளித்தார். மேலும் திமுகவினரால் இது போன்ற தொந்தரவுகள் ஏற்பட்டால் தன்னிடம் புகார் அளிக்குமாறும் ஸ்டாலின் கேட்க கொண்டார்.