பெரியவர்களுக்குள் இருக்கும் குடும்பப்பகைக்கு குழந்தையை எரித்துக் கொல்வதெல்லாம் ஏற்றுக்கொள்ளவே முடியாது என்று சீமான் ஆவேசமாக கூறியுள்ளார். 

விழுப்புரம் அருகே 10ம் வகுப்பு மாணவி உயிருடன் ஆளுங்கட்சியினரால் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- விழுப்புரம் மாவட்டம் சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி தங்கை ஜெயஸ்ரீ, குடும்ப முன்பகை காரணமாக பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்லப்பட்ட செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். மகளை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு எனது ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கேற்கிறேன்.

பெரியவர்களுக்குள் இருக்கும் குடும்பப்பகைக்கு குழந்தையை எரித்துக் கொல்வதெல்லாம் ஏற்றுக்கொள்ளவே முடியாத கொடூரமான செயல். இதற்கு காரணமானவர்களுக்கு எவ்வித பாகுபாடும் இன்றி விரைந்து தண்டனை வழங்கப்பட வேண்டும்.

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் கடுமையான சட்டங்களால் மட்டுமே நிறுத்தப்படும் என்பதை உணர்ந்து அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.