விழுப்புரம் திமுக மத்திய மாவட்ட செயலாளராக நா.புகழேந்தி நியமனம் செய்யப்படுவதாக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பொதுக்குழு கூட்டம் கடந்த வாரம் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் இருந்து காணொலி வாயிலாக பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இதில், திமுக பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலுவும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதேபோல்,  திமுக துணை பொதுச்செயலாளராக பொன்முடியும், ஆ. ராசாவும் தேர்வாகினர். இதை கட்சியின் தலைவர் முக ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்நிலையில், விழுப்புரம் திமுக மத்திய மாவட்ட செயலாளராக நா.புகழேந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- திமுகவின் விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளராக நா.புகழேந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார். திமுக துணைப் பொதுச்செயலாளரான க.பொன்முடி மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து விலகியதால் நா.புகழேந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார். திமுக சட்டவிதிகளின் படி ஒருவருக்கு ஒரு பொறுப்பு என்ற அடிப்படையில் புதிய நிர்வாகி தேர்வு செய்யப்பட்டுள்ளார் இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.