சமீபகாலமாக தேர்தலின்போது மூத்த நிர்வாகிகளை கலந்து ஆலோசிப்பது இல்லை கூறி அதிமுகவில் இருந்து முன்னாள் எம்எல்ஏ விலகியுள்ளார். 

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக இரண்டாக உடைந்தது. பின்னர், ஓபிஎஸ், இபிஎஸ் இணைந்தனர். இதனையடுத்து, டிடிவி தினகரன் தனி அணியாக செயல்பட்டு வந்தார். ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி அணி இணைந்தாலும் மனங்கள் இணையவில்லை. கடந்த தேர்தலில் ஜெயலலிதாவால் ஒதுக்கப்பட்ட அனைவருக்கும் இந்த தேர்தலில் அதிமுக சீட் வழங்கப்பட்டது. 

மேலும், பாஜகவுடன் கூட்டணி அமைத்தது, தேமுதிகவை வெளியேற்றியது உள்ளிட்ட பல விசயங்களில் திருப்தி இல்லை என்று கட்சி பொறுப்புகளில் இருக்கும் பலர் வெளிப்படையாகவே பேசி வருகின்றனர். இந்நிலையில், கட்சியின் மீது ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாக விழுப்புரம் தொகுதியில் கடந்த 1984 தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற மணி என்கிற ராஜரத்தினம் அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: அதிமுகவில் முன்னாள் எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்பிக்கள் உள்ளிட்ட மூத்த கட்சி நிர்வாகிகள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். 

சமீபகாலமாக தேர்தலின்போது மூத்த நிர்வாகிகளை கலந்து ஆலோசிப்பது இல்லை. இந்த அலட்சியப்போக்கு நீடிப்பதால் அதிமுகவிலிருந்தும், அரசியலில் இருந்தும் விலக முடிவு செய்துள்ளேன். இதே போல் கட்சி தலைமை மீது மூத்த நிர்வாகிகள் பலரும் மிகுந்த மன வருத்தத்தில் உள்ளனர் என கூறியுள்ளார்.