வில்லிவாக்கம் தொகுதி திமுக எம்எல்ஏ ரங்கநாதனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதையடுத்து அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். 

கொரோனா பரவலை தொடர்ந்து பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கை அடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக எம்.பி. மற்றும் எம்எல்ஏக்கள் கட்சி நிர்வாகிகள் நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகின்றனர். மக்கள் நலப்பணியில் ஈடுபடும் அவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை அதிமுக, திமுகவை சேர்த்து 40க்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து மீண்டுள்ளனர். 

அண்மையில் சென்னை தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், சைதாப்பேட்டை தொகுதி எம்எல்ஏவுமான மா.சுப்பிரமணியனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அவருடன் அவரது மனைவியும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவருவரும் வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில், வில்லிவாக்கம் தொகுதி திமுக எம்எல்ஏ ரங்கநாதனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவருக்கு கடந்த சில நாட்களாகவே இருமல் இருந்து வந்ததையடுத்து கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அப்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் சென்னை கொளத்தூர் ஜவஹர்நகரில் உள்ள தன்னுடைய வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டார். இவர் தனது தொகுதியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.