villagers waiting for their own land man rajini kanth

நடிகர் ரஜினி காந்த் என்றாவது ஒருநாள் தன்னுடைய பிறந்த மண்ணைப் பார்க்க வருவார் என்ற நம்பிக்கையில் அவரின் சொந்த கிராமமக்கள் காத்திருக்கிறார்கள். 

மஹாராஷ்டிரா மாநிலம், புனே நகரில் இருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் மாவாடி கேடாபதார் கிராமம் உள்ளது. இதுதான் சிவாஜிராவ் கெய்க்வாட் என்ற ரஜனி காந்தி பிறந்த கிராமமாகும்.
இந்த கிராமத்தில் உள்ள யஷ்வந்தாரி கோயிலில் கடந்த வெள்ளிக்கிழமை ரஜினி காந்தின் அரசியல் வாழ்க்கை சிறப்பாக அமைய சிறப்பு வழிபாடும் நடத்தப்பட்டது. 

ரஜினிகாந்த் கிராமம்
தமிழ் திரைஉலகில் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் ரஜினி காந்த், சமீபத்தில் தனது அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்தார். அந்த அறிவிப்புக்கு பின், மாவாடி கடேபதார் கிராமத்தில் உள்ள மக்களுக்கு உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறது. 

ரஜினி காந்தின் கெய்வாட் சமூகத்தினர் ஏராளமானவர்கள் இருப்பதால் அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். ரஜினி காந்த் அரசியல் பிரவேசத்துக்கு பின், இந்த கிராமம் ‘ரஜினி காந்த் கிராமம்’ என்று அழைக்கப்பட்டு வருகிறது. 

மராத்தியில் பேசினார்
இது குறித்து முன்னாள்கிராமத் தலைவர் ஹனுமந்த் சச்சார் கூறுகையில், “ இந்த மண்ணின் மைந்தரான ரஜினி சினிமாவில் சாதித்ததுபோல் அரசியலிலும் அவர் சாதிப்பார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் லோனாவாலா பகுதிக்கு படப்பிடிப்புக்காக வந்த ரஜினிகாந்தை சந்திக்க முயன்றோம் முடியவில்லை.

அதன்பின் ஓட்டலுக்கு சென்று, அவரைச் சந்தித்தோம். நாங்கள் இந்தியில் பேசினோம். அவரோ எங்களை மராத்தியில் பேசக் கூறி, அவரும் தெளிவான மராத்தி மொழியில் பேசி எங்களை ஆச்சர்யப்படுத்தினார்’’ எனத் தெரிவித்தார். 

பாபன்ராவ் கெய்க்வாட் என்ற முதியவர் ரஜினி காந்த் குடும்பம் குறித்து கூறுகையில், “ ரஜினிகாந்த் மூதாதையர்கள் இந்த கிராமத்தில் இருந்து கர்நாடக மாநிலம், விஜயபுரா தாலுகாவில் உள்ள பசவனா பேகாவாடி பகுதிக்கு குடிபெயர்ந்தனர். அங்கிருந்து வேலைநிமித்தமாக பெங்களூருக்கு சென்றார்கள். ஆனால், ரஜினி காந்துக்கு பூர்வீகம் இந்த கிராமம்தான். 

காத்திருக்கிறோம்
அவரை கிராமத்தின் சார்பில் இங்கு வருகை அழைத்து இருந்தோம். அவரும் சம்மதம் ெதரிவித்துள்ளார் அவரின் வருகையை எதிர்பார்த்து இருக்கிறோம். இதற்கு முன் எங்கள் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் சென்னை போயஸ் கார்டன் பகுதிக்கு சென்று ரஜினி காந்தை சந்திக்க முயன்றும் முடியாமல் வருத்தத்துடன் திரும்பினர். அவரின் வீட்டை மட்டும் பார்த்துவிட்டு வந்தனர் ’’ எனத் தெரிவித்தார். 

விருதுக்கு பரிந்துரை
இதற்கிடைய பா.ஜனதா எம்.எல்.ஏ. அணில் கோட், கடந்த 2016ம் ஆண்டு ரஜினி காந்துக்கு மஹாராஷ்டிரா மாநிலத்தின் உயரிய பூஷன் விருதை வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்து இருந்தார்.