தமிழகம் முழுவதும் 12 ஆயிரத்து 524 கிராம ஊராட்சிகளிலும் இன்று நடைபெற இருந்த கிராமசபை கூட்டங்கள் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.,இந்த திடீர் உத்தரவு வேளாண்பாதுகாப்பு சட்டத்தினை எதிர்த்து கிராம சபையில் தீர்மானங்கள் நிறைவேற்றுவார்கள் என்று பயந்து தமிழக அரசு இப்படியொரு நடவடிக்கையை எடுத்திருப்பதாக அரசியல் கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டியிருக்கிறக்கிறார்கள்..

கிராம வளர்ச்சிக்கு உரிய திட்டங்களை வகுத்தல், அவற்றை செயல்படுத்துதல் போன்ற பணிகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழிகாட்டுவது கிராமசபையாகும். மேலும் ஊராட்சிகளில் நடைபெறும் பல்வேறு பணிகளின் செயல்பாடுகளை கண்காணிக்கும் முக்கிய பொறுப்பும் கிராமசபைக்கு உண்டு. ஆண்டுதோறும், ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15 மற்றும் அக்டோபர் 2 ஆகிய 4 நாட்கள் நடத்தப்பட வேண்டும். தேவை அடிப்படையில் சிறப்பு கிராம சபைக்கூட்டங்களும் நடத்தப்படும்.

இந்நிலையில், கடந்த, மே 1ம் தேதி மற்றும் ஆகஸ்ட் 15-ம் தேதி கொரோனா பரவலை காரணம் காட்டி கிராமசபைக்கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், கொரோனா காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால், இன்று அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தியன்று 12 ஆயிரத்து 524 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டத்தை நடத்தும்படி, ஊரக வளர்ச்சித்துறை அறிவித்திருந்தது. மேலும், கொரோனா காலத்தில் நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைளையும் வெளியிட்டது. அதில், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கொரோனா பரவல் உயர்ந்துள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர்கள் கிராம சபைக்கூட்டங்களை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். சமீபத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கிராம சபைக்கூட்டங்களில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றும்படி கூறியிருந்தார்.இந் நிலையில், தற்போது கிராமசபைக்கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.