திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாட்கள் நாங்குநேரியில் பிரச்சாரம் செய்த நிலையில் வெறும் திண்ணை பிரச்சாரத்தோடு அவர் ஒதுங்கியது காங்கிரஸ் நிர்வாகிகளை டென்சன் ஆக்கியுள்ளது.

கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நாங்குநேரி தொகுதியில் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். காலையில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனோடு புறப்பட்ட அவர் மூன்று கிராமங்களில் திண்ணைப் பிரச்சாரம் என்று கூறி வாக்குசேகரித்தார். கிராம மக்களை ஒரே இடத்தில் கூட்டி அவர்களிடம் மனுக்களை பெற்று கோரிக்கைகளை கேட்டு பிறகு வாக்குகேட்டு விட்டு சென்றார்.

இரண்டு நாட்களும் இதே பாணியில் தான் ஸ்டாலின் நாங்குநேரியில் வாக்குசேகரித்தார். பொதுக்கூட்டம், வேன் பிரச்சாரத்தில் அவர் அங்கு ஆர்வம் காட்டவில்லை. அதே சமயம் விக்கிரவாண்டியில் திமுக வேட்பாளரை ஆதரித்து திண்ணை பிரச்சாரம் மட்டும் அல்லாமல் வேன் பிரச்சாரத்திலும் இறங்கினார் ஸ்டாலின். பேருந்தை நிறுத்தி உள்ளே ஏறி வாக்கு சேகரிப்பது போன்ற ஜிமிக்ஸ் வேலைகளும் விக்கிரவாண்டியில் நடைபெற்றது.

நாங்குநேரியை காட்டிலும் ஸ்டாலின் விக்கிரவாண்டியில் மேற்கொண்ட பிரச்சாரம் தான் ஊடக வெளிச்சம் பெற்றது. இதற்கு காரணம் நாங்குநேரியில் அவர் பொதுக்கூட்டத்திலோ அல்லது வேன் பிரச்சாரத்திலோ ஈடுபடாதது தான் என்று ரூபி மனோகரன் தரப்பு கூறி வருகிறது. பலமுறை கேட்டும் திமுக தரப்பில் இருந்து ஸ்டாலின் வேன் பிரச்சாரத்திற்கோ, பொதுக்கூட்டத்திற்கோ இசைவு தெரிவிக்கவில்லை என்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் புலம்பி வருகின்றனர்.