விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் கிடைத்த வெற்றிக்கு முழுக் காரணம் தனது சகோதரர் தான் என்று கூறி சிலிர்த்து வருகிறார் சிவி சண்முகம்.

இடைத்தேர்தலில் நாங்குநேரியில் அதிமுகவும், விக்கிரவாண்டியில் திமுகவும் தான் வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்புகள் கூறி வந்தன. ஆனால் அதனை எல்லாம் பொய்யாக்கி 40 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் விக்கிரவாண்டியில் அதிமுகவை வெற்றி பெற வைத்துள்ளார் சிவி சண்முகம். தேர்தல் சமயத்தில் வீட்டில் நிகழ்ந்த துக்கம், துயரம் எல்லாவற்றையும் மீறி வெற்றிக் கொடியை உயரப் பறக்கவிட்டுள்ளார்.

நேற்று வாக்கு எண்ணிக்கை துவங்கியது முதலே அதிமுக வேட்பாளர் முன்னிலை என்கிற தகவல் வெளியாகிக் கொண்டிருந்தது. வாக்கு வித்தியாசம் 10 ஆயிரத்தை கடந்த உடன் அதிமுக வெற்றி உறுதியானது. அப்போது முதலே அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அனைவரும் வாழ்த்து தெரிவிக்க ஆரம்பித்தனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், சண்முகத்தை தொலைபேசியில் தொடர்பு கொள்ள, எல்லாத்துக்கும் எங்க அண்ணன் தான் காரணம் என்று கூறி நெகிழ்ந்துள்ளார் சண்முகம்.

திடீரென சண்மும் இப்படி கூற காரணம் என்ன என்று விசாரித்த போது, விக்கிரவாண்டி தேர்தல் பணிகள் முழுவதையும் தனது கட்டுப்பாட்டில் எடுத்து செய்து முடித்தது சண்முகத்தின் அண்ணன் ராதாகிருஷ்ணன் தான் என்கிறார்கள். அதிலும் வாக்கு வித்தியாசம் இந்த அளவிற்கு அதிகமாக காரணம் பாமக மற்றும் தேமுதிக வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் அதிமுகவிற்கு விழுந்தது தான் என்று சொல்கிறார்கள்.

இதற்கு ராதாகிருஷ்ணன் மேற்கொண்ட முயற்சி தான் மிக முக்கிய காரணம். குறிப்பாக பாமக மற்றும் தேமுதிக நிர்வாகிகளை மிகச் சரியாக கவனித்து கிளைக்கழக நிர்வாகிகள் வரை கொடுக்க வேண்டியதை கொடுத்திருக்கிறார்கள். அதோடு மட்டும் அல்லாமல் தேர்தல் நாளன்று தன்னால் முடிந்த அளவிற்கு ராதாகிருஷ்ணன் வாக்குச் சாவடிகளுக்கு சென்றுள்ளார்.

மேலும் ஏற்கனவே திட்டமிட்டபடி வாக்காளர்கள் சரியாக வருகிறார்களா என நேரடியாக கண்காணித்து டிமிக்கி கொடுத்த சிலரை ராதாகிருஷ்ணன் லெப்ட் அன்ட் ரைட் வாங்கியதை நேரடியாகவே பலர் பார்த்துள்ளனர். இப்படி தனது அண்ணன் செய்த வேலைகளை நினைத்து தான் சிவி சண்முகம் அப்படிக் கூறினாராம்.

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 266 வாக்குசாவடிகள் உள்ளன. அதில், அமைச்சர் சி.வி.சண்முகதத்தின் அண்ணனும், நியூஸ் ஜெ. நிர்வாக இயக்குநனருமான ராதாகிருஷ்ணன் மட்டும் வாக்குப்பதிவு நடத்த ஒரே நாளில் 145 வாக்குச்சாவடிகளை திறம்பட கையாண்டுள்ளார்.