விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றால் நிலங்களை அபகரிப்பது, கடைகளில் புகுந்து தாக்குவது போன்ற அத்துமீறல்கள் தான் நடைபெறும். ஆகையால், தமிழகத்தில் அமைதியான ஆட்சி தொடர அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்திவிடாது. அதிமுக ஆட்சிப் பயணத்திற்கு எந்த தடையும் ஏற்பட்டு விடாது. அதேநேரத்தில் தமிழக சட்டப்பேரவைக்கு அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தலுக்கான முன்னோட்டமாகவே இந்த இரு தொகுதிகளின் இடைத்தேர்தல் பார்க்கப்பட வேண்டும்.

மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு சாத்தியமாகக் கூடிய வாக்குறுதிகளை அளிக்கும் அதிமுக - பாமக கூட்டணி தான் இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற வேண்டும். இடைத்தேர்தலாக இருந்தாலும், பொதுத் தேர்தலாக இருந்தாலும் திமுக வெற்றி பெற்றால், அதனால் பாதிக்கப்படப் போவது அப்பாவி மக்கள் தான்.

அதிமுக வெற்றி பெற்றால் இரு தொகுதிகளிலும் ஏராளமான மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்படும். மாறாக, திமுக வெற்றி பெற்றால் நிலங்களை அபகரிப்பது, கடைகளில் புகுந்து தாக்குவது போன்ற அத்துமீறல்கள் தான் நடக்கும். இவற்றை, மனதில் கொண்டு, விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரு தொகுதிகளிலும் வாக்களிக்க வேண்டும். தமிழகத்தில் அமைதியான ஆட்சி தொடர இரு தொகுதிகளிலும் அதிமுகவை வெற்றி பெறச் செய்ய வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் ராமதாஸ் கூறியுள்ளார்.