வெள்ளையன் தலைமையில் செயல்பட்டு வந்த வணிகர் சங்கங்களின் பேரவையை உடைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு என்ற புதிய அமைப்பை துவக்கியவர் விக்ரமராஜா. பிற்காலத்தில் வெள்ளையனை விட வணிகர்கள் மத்தியில் பிரபலமாக வெள்ளையன் சங்கத்தை ஓரம் கட்டி தற்போது வணிகர்கள் மத்தியில் அதிக அளவில் செல்வாக்கோடு இருப்பவர் விக்ரமராஜா.
   
வெள்ளையன் எப்போதுமே தி.மு.க எதிர்ப்பு நிலைப்பாட்டை கொண்டவர். எனவே தான் அவர் தலைமையிலான வணிகர் சங்க பேரவையை தி.மு.க உடைத்து விக்ரமராஜாவை வைத்து புதிய சங்கத்தை தொடங்கியதாக கூட ஒரு பேச்சு உண்டு. அந்த பேச்சை உறுதிப்படுத்தும் வகையில் தி.மு.கவிற்கு ஆதரவான சில நிலைப்பாடுகளையும் விக்ரமராஜா கடந்த காலங்களில் எடுத்துள்ளார்.
   
வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவராக இருந்து கொண்டே விக்ரமராஜா அவர் சார்ந்த நாடார் சமுதாய அமைப்புகளிலும் தீவிரமாக இயங்கி வந்தவர். அதிலும் சென்னையில் பல்வேறு கல்வி நிறுவனங்களையும், வணிக வளாகங்களையும் கொண்டுள்ள நெல்லை – தூத்துக்குடி நாடார் மகிமை பரிபாலன சங்கத்தின் செயலாளராக விக்ரமராஜா இருந்த போது பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.


   
சங்கத்தின் கட்டுப்பாட்டில் புதிதாக நெல்லை நாடார் என்கிற பள்ளியை துவங்கியதில் முறைகேடு நடைபெற்றதாலும், அந்த பள்ளியின் கட்டுமானப்பணிகளுக்கு திட்டமிட்டதை விட அதிக பணம் செலவழிக்கப்பட்டது போல் கணக்கு காட்டப்பட்டுள்ளதாகவும் கடந்த ஆண்டே விக்ரமராஜா மீது புகார் எழுந்தது. கட்டிடமே கட்டாமல் கட்டியதாக கணக்கு எழுதியதாகவும், செங்கல் லோடு வராமலேயே வந்ததாக கணக்கு எழுதியதாகவும் விக்ரமராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் புகாருக்கு ஆளாகினர்.
   
சுமார் 13 கோடி ரூபாய் வரை நாடார் சங்க பணத்தை விக்ரமராஜா கையாடல் செய்துவிட்டதாக அதே சங்கத்தில் ஏற்கனவே நிர்வாகியாக இருந்தவரும் வெள்ளையனின் சகோதரருமான பத்மநாபன் கடந்த ஆண்டே சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் தற்போது விக்ரமராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அவர் விசாரணைக்கு அழைக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
   
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி எதிர்கட்சிகள் நடத்திய கடையடைப்பு போராட்டத்திற்கு விக்ரமராஜா ஆதரவு தெரிவித்திருந்தார். இதனால் அப்போதே அவர் மீது அரசுக்கு கோபம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. அந்த கோபத்தின் வெளிப்பாடாகவே விக்ரமராஜா மீது தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அவர் கைது செய்யப்படவும் வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.