vikram bhathra meeting with political parties representatives
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா புகார்கள் தொடர்பாக அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தேர்தல் சிறப்பு அதிகாரி விக்ரம் பத்ரா ஆலோசனை நடத்தி வருகிறார்.
கடந்த ஓராண்டாக காலியாக இருந்த ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. திமுக, அதிமுக, தினகரன் ஆகிய மூன்று தரப்பும் ஒவ்வொரு வகையில் தங்களின் வலிமையை நிரூபிக்க போராடுகின்றன. இதுவரை இல்லாத அளவிற்கு ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் நடக்க இருந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா புகார் காரணமாக ரத்து செய்யப்பட்டது. அதனால் இந்தமுறை பணப்பட்டுவாடாவைத் தடுக்க தேர்தல் ஆணையம் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
எனினும் பல்வேறு கட்டுப்பாடுகளையும் மீறி பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக இதுவரை 8 பேரை கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள விக்ரம் பத்ரா, பணப்பட்டுவாடா புகார்கள் தொடர்பாக அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
தலைமை செயலகத்தில் நடக்கும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில், திமுக, அதிமுக, பாஜக, உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டுள்ளனர். ஒவ்வொரு கட்சி பிரதிநிதிகளுடனும் தனித்தனியாக விக்ரம் பத்ரா ஆலோசனை நடத்துகிறார்.
திமுக சார்பில் அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின், துரைமுருகன், ஆர்.எஸ்.பாரதி ஆகியோரும் அதிமுக சார்பில் அமைச்சர் ஜெயக்குமார், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். தினகரன் சார்பில் அவரது ஆதரவாளர் வெற்றிவேல் கலந்துகொண்டுள்ளார்.
ஒவ்வொரு கட்சி பிரதிநிதிகளுடனும் தனித்தனியாக ஆலோசனை நடத்தி, அவர்களிடமிருந்து பணப்பட்டுவாடா தொடர்பான ஆதாரங்களையும் புகார்களையும் விக்ரம் பத்ரா பெற்றுவருகிறார்.
