நடிகர் விஜய் சேதுபதி அவரது மேலாளர் ஜான்சன் ஆகியோர் ஜனவரி 4-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொது வெளியில் தன்னை இழிவுபடுத்தி பேசியதுடன், தன்னையும் தனது சாதியையும் தவறாக பேசியதாக விஜய் சேதுபதிக்கு எதிராக மகா காந்தி என்பவர் கொடுத்த கிரிமினல் அவதூறு வழக்கில் நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது

நடிகர் விஜய் சேதுபதி அவரது மேலாளர் ஜான்சன் ஆகியோர் ஜனவரி 4-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது பொது வெளியில் தன்னை இழிவுபடுத்தி பேசியதுடன், தன்னையும் தனது சாதியையும் தவறாக பேசியதாக விஜய் சேதுபதிக்கு எதிராக மகா காந்தி என்பவர் கொடுத்த கிரிமினல் அவதூறு வழக்கில் நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது. 

கடந்த நவம்பர் மாதம் 3-ஆம் தேதி பெங்களூரு விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் புடைசூழ நடந்து சென்ற நடிகர் விஜய் சேதுபதியை அவரது பின்னால் ஓடி வந்த ஒரு நபர் எகிரி எட்டி உதைத்த வீடியோ காட்சி சமூக ஊடகங்களில் வைரலானது. அப்போது விஜய்சேதுபதி தாக்கப்பட்டதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் பெங்களூரு விமான நிலையத்தில் விஜய்சேதுபதி தாக்கப்பட்டதாக பரவும் செய்தி உண்மையில்லை என பெங்களூர் போலீசார் மறுப்பு தெரிவித்தனர். மேலும் விமான நிலையத்தில் விஜய் சேதுபதிக்கு வழி ஏற்படுத்தும் முயற்சியில் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், விஜயசேதுபதியின் உதவியாளர் மீதுதான் தாக்குதல் நடந்ததாகவும் பெங்களூரு போலீசார் தெரிவித்திருந்தனர்.

அதே நேரத்தில் இந்த விவகாரம் தொடர்பாக இரு தரப்பினரிடமும் பேசி அப்போதே சமாதானம் செய்யப்பட்டுவிட்டது என்றும் பிறகு கூறப்பட்டது. அதேபோல், இந்த விவகாரத்தில் தாக்குதல் நடத்தியவர் பெயர் மகா காந்தி என்பதும், அவர் தமிழ் நடிகர் விஜய் சேதுபதியுடன் புகைப்படம் எடுக்க முயற்சிக்கும் போது மோதல் ஏற்பட்டதாகவும் பின்னர் மாறுபட்ட கருத்துக்கள் இதில் வெளியானது. இந்நிலையில் இது தொடர்பாக மகா காந்தி யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளிக்கையில், அண்மையில் தேசிய விருது வாங்கிய விஜய்சேதுபதியிடம் விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள் என்றேன், ஆனால் விஜய் சேதுபதியோ இது தேசமா என்று கேட்டார், அப்போது குருபூஜைக்கு ஏன் வரவில்லை என்று நான் அவரிடம் கேட்டேன், அதற்கு விஜய் சேதுபதி குரு என்றால் யார் என்று கேட்டார். இருவரும் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போதே அவருடன் இருந்தவர்கள் என்னை தாக்கினார்கள். அதனால்தான் நான் திருப்பி தாக்கினேன். இதுதொடர்பாக விமான நிலைய சிசிடிவி காட்சிகளை கேட்டுள்ளேன், அதன்மூலம் அவர்கள் என்னை தாக்கியதை நிரூபிப்பேன் என தெரிவித்திருந்தார்.

அதனை அடுத்து மகா காந்தியின் கருத்துக்கு நடிகர் விஜய்சேதுபதி எதிர்ப்பு தெரிவித்து விளக்கம் ஒன்று அளித்தார். அதில், பெங்களூரு விமான நிலையத்தில் நிலை தவறிய நிலையில் ஒருவர் என்னை அணுகினார். நான் பிறகு பேசலாம் என்றேன், ஆனால் நீ என் ஜாதி தான பேசுப்பா நானும் நடிகன்தான் என்பதுபோல சத்தமாக கேட்டபடி வந்தார். ஆனால் அவர் சொல்வது போல தேசியத்தையும் தெய்வீகத்தையும் அதேசமயம் தமிழர்களையும் தன் உயிராக கருதி வாழ்ந்த தெய்வத் திருமகனார் பசும்பொன் ஐயா குறித்து நான் எதுவும் பேசவில்லை என்று தெரிவித்திருந்தார். அதேபோல் தொடர்ந்து அவதூறு செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்றும் விஜய்சேதுபதி எச்சரித்திருந்தார்

இதற்கிடையில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தேவர் அய்யாவை இழிவுபடுத்திய நடிகர் விஜய் சேதுபதியை தாக்குபவர்களுக்கு ரொக்கப்பரிசு 1001 வழங்கப்படுமென அறிவித்திருந்தார். விஜய் சேதுபதி மன்னிப்பு கேட்கும் வரை அவரை உதைப்பவர்கள் ஒவ்வொருவருக்கும் 1001 என அவர் கூறினார். இது தமிழகம் முழுவதும் பரபரப்பானது. இதனால் விஜய் சேதுபதியின் ரசிகர்கள் அர்ஜுன் சம்பத்தை மிக கடுமையாக எதிர்த்தனர். இந்நிலையில் மகா காந்தி சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடிகர் விஜய்சேதுபதி தன்னை சாதியின் பெயரை கூறி அவமானப்படுத்தியதாக கிரிமினல் வழக்கு தொடர்ந்தார்.

அதில் கூறிய அவர், மருத்துவ பரிசோதனைக்காக மைசூர் செல்வதற்காக நவம்பர் 2ஆம் தேதி இரவு பெங்களூர் விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதியை எதிர்பாராத விதமாக சந்தித்ததாகவும், திரைத்துறையில் அவரின் சாதனைகளை பாராட்டி வாழ்த்தியதாகவும், ஆனால் தனது வாழ்த்துக்களை ஏற்க மறுத்த விஜய் சேதுபதி பொதுவெளியில் தன்னை இழிவு படுத்திய விதம் தன்னையும், தனது சாதியையும் பற்றி தவறாக பேசியதாகவும் குறிப்பிட்டுள்ளார். விமான நிலையத்திலிருந்து வெளியேறிய போது தன் மீது அவரது மேனேஜர் ஜான்சன் மூலமாக தாக்குதல் நடத்தியதாகவும் அதில் மகா காந்தி குற்றம்சாட்டியிருந்தார். மேலும் விஜய்சேதுபதியின் மேலாளர் ஜான்சன் தன்னை தாக்கியதால் செவித்திறன் பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவிப்பதாகவும் அவர் அந்த மனுவில் வேதனை தெரிவித்திருந்தார். ஆனால் உண்மை நிலை இப்படியிருக்க தான் விஜய்சேதுபதியை தாக்கியதாக அவதூறு பரப்புவதாகவும் அவர் மனுவில் குற்றம் சாட்டியிருந்தார்.

எனவே தனக்கு எதிராக அவதூறு பரப்பும் விஜய்சேதுபதி, அவரது மேலாளர் ஜான்சன் ஆகியோர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் அந்த மனு மீதான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் விஜய் சேதுபதி, வாழ்த்த வந்தவரை பொதுவெளியில் தாக்கி சாதியை இழிவாக பேசிய விவகாரத்தில் நடிகர் விஜய் சேதுபதி, அவரது மேலாளர் ஜான்சன் ஆகியோர் வரும் ஜனவரி 4ஆம் தேதி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக சம்மன் விஜய் சேதுபதி மற்றும் அவரது மேலாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த தகவல் விஜய் சேதுபதி விவகாரத்தில் அடுத்த நிலையை எட்டியுள்ளது என்பது குறிப்பிடதக்கது.