Vijay Mersal Title Thalapathy turns out Controversy and comparing it with Stalin
ஜஸ்ட் ஒரேயொரு வார்த்தை தமிழக அரசியலுக்கும், தமிழ் சினிமா உலகத்துக்கும் இடையில் ஒரு பிரளயத்தை உருவாக்க முடியுமா? என்றால் அது முடியுமென்று சாதித்திருக்கிறது...அது ‘தளபதி’ எனும் ஒற்றை வார்த்தை. நடிகர் விஜய்யின் பிறந்தநாளன்று அவரது ரசிகர்களுக்கு சர்ப்பரைஸ் தருவதற்காக அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தின் டைட்டிலான ‘மெர்சல்’ மற்றும் ஃபர்ஸ்ட் லுக் நேற்று மாலையில் வெளியிடப்பட்டது.
இந்த அறிவிப்பு ஸ்லைடை பார்த்து விஜய் ரசிகர்களுக்கு டபுள் கொண்டாட்டம், தி.மு.க.வினருக்கோ கடும் காட்டம். விஜய் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாவதில் தி.மு.க.வுக்கு என்ன காட்டம்! உதயநிதி அப்படியொன்னும் விஜய்க்கு போட்டியா வளர்ந்துடலையே?...என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் இது வேற விஷயம். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலம் விஜய், ஸ்டாலினை வம்புக்கிழுத்திருப்பதுதான் விவகாரம். பல வருடங்களாக விஜய்யை ‘இளைய தளபதி’ எனும் பெயரோடுதான் விளித்துக் கொண்டிருந்தது சினிமா உலகம்.

ஆனால் மெர்சல் ஃபர்ஸ்ட் லுக் ஸ்லைடில் அவரை ‘தளபதி” என்று போட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரையில் ‘தளபதி’ என்றால் அது ஸ்டாலின் தான் என்று ஆழமாக பதிந்திருக்கும் நிலையில் விஜய் தனக்கு அந்த பெயரில் மாஸ் ஏற்றிக் கொண்டிருப்பது தி.மு.க.வை அவர் வலிய சென்று வம்புக்கிழுப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது.
தி.மு.க.வுடன் விஜய் தரப்பு மோதுவது ஏதோ புதிதல்ல. விஜய்யும், உதயநிதியும் லயோலா காலத்து நண்பர்கள். சினிமாவுக்குள் தயாரிப்பாளராக நுழைந்த உதயநிதி தனது ரெட்ஜெயண்ட் மூவீஸ் மூலம் ‘குருவி’ படத்தை தயாரித்தார். இந்த படம் ரிலீஸாகும் நேரத்திலோ அல்லது ரிலீஸான பின்னோ உதயநிதிக்கும், விஜய்க்கும் இடையில் ஒரு மோதல் உருவானது. அது இன்று வரை நீடிக்கிறது. சினிமாவில் துவங்கிய இந்த மோதல் 2011 தேர்தலின் போது விஜயின் மக்கள் இயக்கத்தை தி.மு.க.வுக்கு எதிராகவே தேர்தல் வேலை பார்க்கும் அளவுக்கு கொண்டு போனது. தனது ரசிகர்கள் அ.தி.மு.க.வுக்கு ஓட்டு போடவேண்டும் என்றும் , அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக தேர்தல் வேலை பார்க்க வேண்டும் என்றும் கட்டளையிட்டார் விஜய்.

ஜெயலலிதா முதல்வராக வந்தால் அவர் தயவில் தி.மு.க.வை மிக வலுவாக எதிர்க்கலாம் என்பது விஜய்யின் கனவு. விஜய் எதிர்பார்த்தபடி ஜெயலலிதா முதல்வரானார். ஆனால் அரசியல் எண்ணத்தில் இருக்கும் அநாவசியமாக விஜய்யை வளர்த்துவிடவே வேண்டாமென்று ஆட்சிக்கு வந்ததுமே முடிவெடுத்தார்.
2012ல் தலைவா படம் ரிலீஸுக்கு தயார ஆன போது அதில் அரசியல் டயலாக்குகள் இருப்பதை ஆட்சி மேலிடம் கண்டுபிடித்தது. இதனால் பட ரிலீஸுக்கு எந்த காரணமும் சொல்லாமல் ஆப்படிக்க ஆரம்பித்தனர். தியேட்டர்கள் கிடைக்கவில்லை, கிடைத்த தியேட்டர்களிலும் படம் ரிலீஸாகவில்லை. இந்தப் படத்தை தன் வளர்ச்சியின் மிகப்பெரிய மைல் கல்லாக நினைத்திருந்த விஜய் அதிர்ந்து போனார். அப்போது கொடநாடில் தங்கியிருந்தபடி தமிழக அரசை நடத்திக் கொண்டிருந்தார் ஜெயலலிதா. அவரிடமே நேராக முறையிடுவது என்று கொடநாடு கிளம்பிப் போனார். ஆனால் கொடநாடுக்கு சில கிலோமீட்டர்கள் முன்பாக ‘கேரடாமட்டம்’ எனுமிடத்தில் அவரது காரை மறித்து, கீழே இறங்கி நடந்தே செல்ல சொல்லியது போலீஸ். நடந்துதான் போனார். அப்படியாவது ஜெயலலிதாவை சந்திக்க முடிந்ததா என்றால்?. முன் அனுமதி இல்லையென்பதால் சந்திக்க முடியாது என்று திருப்பி அனுப்பிவிட்டார்கள்.
அதன் பிறகு தலைகீழாக நின்று தண்ணீர் குடித்துத்தான் படம் ரிலீஸானது. சினிமாவில் மாஸ் காட்டும் விஜய் யதார்த்தத்தில் இப்படி ஜெ., வீட்டு முன் காத்துக்கிடந்து தோற்றது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. இதன் பிறகாவது தி.மு.க.வுக்கு எதிரான செயல்பாடுகளை விஜய் விட்டொழித்தாரா என்றால் அதுவும் இல்லை. அதற்கு அடுத்து வந்த கத்தி படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ‘2ஜின்னா என்னய்யா? அலைக்கற்றை , காத்து. வெறும் காத்த மட்டும் வித்து கோடிக்கோடியா ஊழல் பண்ற ஊருய்யா இது!” என்று தி.மு.க.வுக்கு எதிரான தன் நிலைப்பாட்டை படு நேரடியாக எடுத்து அடித்தார். சரி, நான் தி.மு.க.வின் எதிரி என்று ஜெயலலிதாவுக்கு கிட்டத்தட்ட வெளிப்படையாக விஜய் சொல்லிவிட்டுதான் அடுத்த படமான புலியில் கால் வைத்தார்.

ஆனால் அந்த படத்தின் ரிலீஸுக்கும் முடிந்தளவு முக்காடு போட பார்த்து கடைசியில் அய்யோ பாவம் என்று விட்டது ஜெ., அரசு. என்னதான் ஜெ.,வும் ஸ்டாலினும் அரசியல் எதிரிகள் என்றாலும் பொதுவாய் ஒரு புது எதிரி முளைக்கையில் தங்களுக்குள் விட்டுக் கொடுக்க மாட்டார்கள் என்பதை புரிந்து கொண்டார். அதன் பிறகு தெறி, புலி படங்களில் அடக்கி வாசித்தார் விஜய்.
இந்த சூழலில் ஜெ., இறந்துவிட இதோ அடுத்த படமான மெர்சல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிலேயே ஸ்டாலினை மிக டேரிங்காக வம்புக்கு இழுத்து, தன்னை ‘தளபதி’ என அடையாளப்படுத்திக் கொண்டு அவருக்கு போட்டியாக வந்து நிற்கிறார். ஆக ஜெயலலிதா இல்லாத தைரியத்தில் ஸ்டாலினை எதிர்க்க துவங்கி தன் அரசியல் மூவ்க்கான ஆழத்தை பார்க்க துவங்கியுள்ளார் விஜய். ஆனால் விஜய் இவ்வளவு செய்தும் கூட அவருக்கு எதிரான எந்த நடவடிக்கையிலும் இறங்காமல்தான் இருக்கிறது தி.மு.க. காரணம், விஜய்க்கு எதிரான நடவடிக்கைகளின் இறங்குவதன் மூலம், விஜயை தங்களுக்கு நிகரான எதிரி என்ற தோற்றத்தை உருவாக்கிவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறது திமுக. அதனால்தான் விஜய்க்கு எதிராக எந்த நடவடிக்கையும் திமுக சார்பில் எடுக்கப்படவில்லை.

அங்கே தொட்டு, இங்கே தொட்டு இப்போது தளபதியின் அடிமடியிலேயே கைவைத்துவிட்டார் விஜய். இப்போதும் விஜய்யை கண்டுகொள்ளாமல் தி.மு.க. கடந்து செல்லப்போகிறதா? என பார்த்தால் அதுதான் இல்லை இன்னும் ஒரு சில தினங்களில் வெளியாகவுள்ள இப்படத்திற்கு பிரச்சனை மேல் பிரச்சனையாக வந்து கொண்டே இருக்கின்றது. தயாரிப்பு தரப்பும் ஒவ்வொரு பிரச்சனையாக முடித்து வரும் நிலையில் கடைசியாக விலங்கு நல வாரியத்தின் பிரச்சனை தற்போது வந்துள்ளது. விஜய் படத்திற்கு மட்டும் ஏன் இந்தளவுக்கு பிரச்சனை என்பது புரியாத புதிராக இருந்தாலும் 'மெர்சல்' படத்தின் பிரச்சனைகளுக்கு பின்னணியில் திமுக இருப்பதாக விஜய் ரசிகர் ஒருவர் டுவீட் செய்துள்ளார்.
இதுவரை இளையதளபதியாக இருந்த விஜய் 'மெர்சல்' படத்தில் இருந்து தளபதியாக மாறியுள்ளார். இதனால் கடுப்பான திமுக தரப்பு மறைமுகமாக பிரச்சனை கொடுத்து வருவதாக டுவிட்டரில் வதந்திகள் பரவி வருகின்றது.
