காஞ்சி சங்கர  மடத்தின் 69-வது மடாதிபதியாக இருந்த ஜெயேந்திர சரஸ்வதி சமீபத்தில் ஸித்தியடைந்தார். இதைத் தொடர்ந்து இளைய மடாதிபதியான விஜயேந்திரர் இப்போது 70-வது மடாதிபதியாகி இருக்கிறார். இந்த விஷயத்தில் தோன்றியுள்ள விமர்சன சலசலப்புகள்தான் இப்போது காஞ்சியின் ஹாட் டாபிக் ஆகியிருக்கின்றன. 

அதாவது இளைய மடாதிபதியாக இருந்த விஜயேந்திரர், நேற்று பொறுப்பேற்றார். பொறுப்பேற்கையில் அவர் முகத்தில் புன்னகை தவழ்ந்ததாம். இதை கவனித்துவிட்ட மடத்துக்கு நெருக்கமான சிலர், வாட்ஸ் அப் வாயிலாகவும், வாய்மொழியாகவும் ‘பெரியவா ஸித்தியடைஞ்சு ரெண்டு நா கூட ஆகலை. அதுக்குள்ளே இவாளுக்கு பட்டாபிஷேகம். அது கூட பரவாயில்ல, அந்த பட்டாபிஷேக காரிய நேரத்துல என்ன இவர் சிரிச்சுண்டு இருக்கார். இதெல்லாம் நன்னாவா இருக்குது?’ என்று கிளப்பி விட்டிருக்கின்றனர். 

இது அப்படியே விஜயேந்திரரின் காதுகளுக்குப் போக, பீடாதிபதி சற்றே பீதியாகி, விரக்தியாகிவிட்டாராம். 

இதற்கிடையில், ஜெயேந்திரர் இருந்த இடத்துக்கு விஜயேந்திரர் வந்துவிட்டதால் இளைய பீடாதிபதியின் இடம் இப்போது காலியாகி இருக்கிறது. 

இந்த இடத்துக்கு இப்போதைக்கு யாரையும் தேர்வு செய்யப் போவதில்லை! என்று மடத்தின் மேலாளர் சுந்தரேச ஐயர் வேறு தெரிவித்துள்ளார். இதுவும் தனியாக சர்ச்சையாகிக் கொண்டிருக்கிறது. 

அதாவது...இளைய பீடாதிபதியாக யார் நியமிக்கப்பட இருக்கிறார்கள் என்பதி ஏகப்பட்ட போட்டிகள், சிபாரிசுகள், பஞ்சாயத்துகள் ஓடத் துவங்கிவிட்டனவாம். இதன் வெளிப்பாடே ‘இப்போதைக்கு தேர்வு இல்லை’ என்று  ஐயர் கடையை சாத்தியிருக்கிறார் என்கிறார்கள். 

இன்னும் கொஞ்ச நாட்களில் காஞ்சி பீடத்தை மையமாக வைத்து பல பரபரப்புகள் சிறகடிக்கும் என்பது உறுதியாகி இருக்கிறது.