Vijayendra issue - H.Raja Twitt
தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டபோது எழுந்து நிற்காத விஜயேந்திரர் சர்ச்சையில், திமுக தலைவர் கருணாநிதியை இழுத்துள்ளார் பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா.
பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவின் தந்தை எழுதிய தமிழ் - சமஸ்கிருதம் அகராதி வெளியீட்டு விழா நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில், ஆளுநர், காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்திரர், சாலமன் பாப்பையா உட்பட பலர் கலந்து கொண்டானர்.
விழா முடிவில், தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அப்போது மேடையில் இருந்த அனைவரும் எழுந்து நின்றனர். இதன் பின்னர், தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. அப்போது நின்றிருந்த விஜயேந்திரர், நாற்காலியில் அமர்ந்து கொண்டார். விஜயேந்திரரின் இந்த செய்கை பல்வேறு அரசியல் தலைவர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. விஜயேந்திரரும், சங்கரமடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பல்வேறு தலைவர்கள் கூறி வருகின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பாக, ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கவிஞர் வைரமுத்துவை, பாஜகவின் தமிழிசையும், ஹெச்.ராஜாவும் கடுமையான சொற்களால் விமர்சனம் செய்து வந்தனர் ஆனால், தமிழ்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டபோது நாற்காலியில் அமர்ந்து கொண்ட விஜயேந்திரர் குறித்து பாஜகவை சார்ந்த யாரும் வாய் திறக்காமல் மௌனமாகவே இருந்து வந்தனர்.
இந்த நிலையில், ஹெச்.ராஜா வழக்கம்போல், சர்ச்சையான டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 2010 ஆம் ஆண்டு திமுக ஆட்சியின்போது நடைபெற்ற உலக தமிழ் செம்மொழி மாநாட்டில், தமிழ்த்தாய் வாழ்த்து இசைத்தபோது, திமுக தலைவர் கருணாநிதி, எழுந்து நிற்காமல் உட்கார்ந்து இருப்பது போன்றும், தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது கருணாநிதி எழுந்து நிற்பது போன்ற காட்சியை பதிவிட்டுள்ளார்.
இதன் மூலம் விஜயேந்திரர், எழுந்து நிற்காமல் இருப்பது தவறேதும் இல்லை என்பதை சொல்லாமல் சுட்டிக்காட்டியுள்ளார் ஹெச்.ராஜா. அவரின் இந்த பதிவுக்கு, பலர் எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
