vijaybaskar driver escaped from income tax ride
வருமானவரி துறை சோதனையின் போது, முக்கிய ஆவணம் ஒன்றை எடுத்துக் கொண்டு ஓடிய அமைச்சர் விஜயபாஸ்கரின் கார் டிரைவரை சிஆர்பிஎப் வீரர்கள் சுளுக்கெடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் இன்று அதிகாலை 4 மணிக்கு அதிரடியாக புகுந்த வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்த தொடங்கினர்.
அதனால், வீட்டில் இருந்த அமைச்சர், அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், வருமான வரி அதிகாரிகளின் திடீர் சோதனையால் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

அப்போது, வீட்டை விட்டு யாரும் வெளியே செல்லக்கூடாது என்பதற்காக, மத்திய பாதுகாப்பு படையினர், வீட்டின் நுழைவாயிலை பூட்டி பாதுகாப்பு பணியை மேற்கொள்ள ஆரம்பித்தனர்.
சோதனை நடந்து கொண்டிருந்தபோது, அமைச்சரின் உறவினர் ஒருவர் அங்கிருந்த முக்கிய ஆவணம் ஒன்றை எடுத்துக் கொண்டு வெளியே வந்துள்ளார். அதை பாதுகாப்பு படையினர் பார்த்துவிட்டனர்.
அந்த ஆவணத்தை அவரிடம் இருந்து வாங்குவதற்குள், அங்கிருந்த கார் டிரைவர், அந்த ஆவணத்தை பிடுங்கி எடுத்துக் கொண்டு வெளியே ஓட ஆரம்பித்து விட்டார்.
அவரை பாதுகாப்பு படை வீரர்கள் துரத்திக் கொண்டே சென்றனர். ஆனால், கையில் வைத்திருந்த ஆவணத்தை, அவர் மதில் சுவருக்கு வெளியே வீசி எறிந்து விட்டார்.

வெளியில் இருந்த விஜயபாஸ்கரின் ஆதரவாளர் ஒருவர், அந்த ஆவணத்தை எடுத்துக் கொண்டு ஓடிவிட்டார். அவரை சிஆர்பிஎப் படையினரால் பிடிக்கமுடியவில்லை.
அதனால், ஆவணத்தை வெளியே வீசிய விஜயபாஸ்கரின் கார் டிரைவரை சிஆர்பிஎப் படையினர் தாறு மாறாக சுளுக்கெடுத்து விட்டனர்.
அதன் பிறகு, கார் டிரைவரை ஒரு தனி அறையில் அடைத்து வைத்து அதிகாரிகள், அந்த ஆவணம் குறித்து துருவி, துருவி விசாரணை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது.

இதனிடையே, விஜயபாஸ்கரின் கார் டிரைவரை தாக்கிய சிஆர்பிஎப் வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அபிராமபுரம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
