சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்புடைய இடத்தில் இருந்து கணக்கில் வராத 20 லட்சம் ரூபாயும், விஜயபாஸ்கரின் உதவியாளர் ஆன்லைன் மூலமாக மேற்கொண்டிருந்த சுமார் 20 கோடி ரூபாய் வரையிலான பரிவர்த்தனைகளுக்கும் அவர்களால் கணக்கு காட்ட முடியவில்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். 

மேலும் விசாரணையின் போது அந்த பணம் லஞ்சமாக வந்தது தான் என்று விஜயபாஸ்கரின் தந்தையும், விஜயபாஸ்கரின் உதவியாளரும் வாக்குமூலம் கொடுத்துள்ளதாகவும் வருமான வரித்துறை கூறி வருகிறது.

மேலும் இந்த விவகாரத்தை சுட்டிக்காட்டி, அதற்கான ஆதாரங்களுடன் தமிழக தலைமைச் செயலாளருக்கு வருமான வரித்துறை கடிதம் எழுதியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. லஞ்சம் பெற்றதை விஜயபாஸ்கரின் தந்தையே ஒப்புக் கொண்டிருப்பதால் தற்போது அமைச்சர் பதவியில் இருக்கும் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்குமாறு தலைமைச் செயலாளருக்கு வருமான வரித்துறை சார்பில் அந்த கடிதம் மூலம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

 ஆனால் விஜயபாஸ்கரின் தந்தை வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்கள் வீட்டில் கணக்கில் வராத பணம் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்று கூறியுள்ளார். மேலும் ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் அனைத்தும் தவறானவை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் வருமான வரித்துறை அனுப்பிய கடிதம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தலைமைச் செயலாளர் மூலம் அனுப்பி வைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. 


   
ஆனால் வருமான வரித்துறையினர் பரிந்துரையை ஏற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுகாதாரத்துறை அமைச்சர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டிய நிர்பந்தம் இல்லை என்று சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதனால் தற்போதைக்கு விஜயபாஸ்கர் விவகாரத்தில் பின்வாங்க எடப்பாடி முடிவு செய்துள்ளார். 

அதே சமயம் ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் விவகாரம் குறித்து விளக்கம் கேட்க ஆளுநர் விரைவில் முதலமைச்சரை நேரில் அழைக்க வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.
 ஏற்கனவே இது போன்ற சமயங்களில் ஆளுநர் பன்வாரிலால், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் அழைத்து விளக்கம் கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.