அமெரிக்காவில் சிகிச்சை முடிந்த விஜயகாந்த் வந்த பிறகு கூட்டணி பேச்சுவார்த்தை, தலைவர்கள் சந்திப்பு என பிஸியாகவே இருந்தார். வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்புக்கு பிறகு முழுமையாக ஓய்வில் இருந்துவருகிறார் விஜயகாந்த். தேமுதிக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா தமிழகம் முழுவதும் பிரசாரத்தில் குதித்துள்ளார். இதேபோல விஜயகாந்தின் இரு மகன்கள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் ஆகியோர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவார்கள் என தேமுதிக தரப்பில் செய்திகள் கசிந்தன. 
ஆனால், இருவரும் கோயில், யாகம் என ஆன்மிக விஷயங்களில் ஈடுபட்டதால், அவர்கள் பிரசாரத்துக்கு எப்போது வருவார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஏற்கனவே விஜயகாந்த் தேர்தல் பிரசாரத்துக்கு வருவார்; ஆனால் பேச மாட்டார் என்று அக்கட்சியின் துணை செயலாளர் சுதிஷ் தெரிவித்திருந்தார். எனவே விஜயகாந்த் எப்போது தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்பார் என்ற கேள்வியும் அக்கட்சி வேட்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
தேர்தல் பிரசாரத்தில் விஜயகாந்த் பங்கேற்க ஆர்வமாக இருந்தாலும், அவருடைய உடல்நிலையைக் கருத்தில் கொண்டு மருத்துவர்களும் குடும்பத்தினரும் மறுத்துவிட்டார்கள். ஆனால், சுதிஷ் ஏற்கனவே கூறியபடி தேர்தல் பிரசாரத்துக்கு விஜயகாந்த் வருவாரா மாட்டாரா என்று கேள்வி அக்கட்சித் தொண்டர்களால் தொடர்ந்து முன்வைக்கப்பட்டுவருகிறது. ஆனால், இதுவரை விஜயகாந்த் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்பதற்கான எந்தத் திட்டத்தையும் அக்கட்சி வகுக்கவில்லை என அக்கட்சியின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 இதுபற்றி தேமுதிக வட்டாரங்களில் விசாரித்தபோது, “விஜயகாந்த் எப்போது வருவார் என்பதை தலைமைதான் அறிவிக்க வேண்டும். அப்படியே விஜயகாந்த் வந்தாலும் தேர்தல் நெருக்கத்தில்தான் வருவார். தேமுதிக வேட்பாளர்கள் போட்டியிடும் 4 தொகுதிகளிலும் விஜயகாந்தை அழைத்துவர முன்பு முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், தற்போது அருகே உள்ள வட சென்னையில் மட்டுமே விஜயகாந்த் பிரசாரத்தில் பங்கேற்க வாய்ப்பு உண்டு. அதையும்கூட உறுதியாக சொல்வதற்கில்லை. அதேசமயம் விஜயகாந்துக்கு பதிலாக அவருடைய மகன் விஜய பிரபாகரன் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்பார்” என்று தெரிவித்தன.


கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி கட்சிகள் வேட்பாளர்கள் பட்டியலை அறிவிக்கும் முன்பே தமிழகம் முழுவதும் பிரசாரத்துக்கு கிளம்பியவர் விஜயகாந்த். ஆனால், தற்போதோ அவர் தேர்தல் பிரசாரத்துக்கு வருவாரா என்பதே சந்தேகத்தில் உள்ளது. இதனால், தேமுதிக வேட்பாளர்களும் தொண்டர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.