அ.தி.மு.கவுடன் கூட்டணி வைப்பதற்கு பதில் டி.டி.வி தினகரன் பெட்டர் என்று பிரேமலதா கூறியதாக தே.மு.தி.க வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரை இந்த முறை தே.மு.தி.க.வின் நிலைப்பாடு பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தவில்லை. ஆனால் பிரமாண்ட கூட்டணி அமைக்க துடிக்கும் அ.தி.மு.க.வும், கூட்டணிக்கு யாருமே முன்வராத நிலையில் உள்ள டி.டி.வி.யும் தான் தே.மு.தி.க.விற்காக வழிமேல் விழி வைத்து காத்துள்ளனர். அ.தி.மு.க தரப்பு இரண்டு மூன்று முறை விஜயகாந்தின் மைத்துனரும் கூட்டணி பேச்சு குழு தலைவருமான சுதீசிடம் பேசியுள்ளனர். 

ஆனால் அ.தி.மு.க தரப்பு கூறுவதாக சொன்ன தொகுதிகளின் எண்ணிக்கையை கேட்டதும் சுதீஷ் அதிர்ச்சியின் எல்லைக்கே சென்றுள்ளார். இரண்டு தொகுதிகள் என்று அ.தி.மு.க தரப்பு ஆரம்பிக்க அப்புறம் பேசலாம் என்று சுதீஷ் கூறிவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் அதன் பிறகு அ.தி.மு.க தரப்பில் இருந்து தொடர்பு கொண்ட போதும் கூட 2 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருந்துள்ளனர். 

இரண்டு தொகுதிகள் மற்றும் தேர்தல் செலவுக்கு கணிசமான அமவுன்ட் என்று அ.தி.மு.க தரப்பு தூண்டிலை போட, வாய்ப்பே இல்லை என்று சுதீஷ் கூறிவிட்டார். மேலும் இந்த தகவலை உடனடியாக அமெரிக்காவில் உள்ள தனது அக்கா பிரேமலதாவிடம் சுதீஷ் பாஸ் செய்துள்ளார். இதனை கேட்டு கடுப்பான பிரேமலதா தற்போதைக்கு அ.தி.மு.கவை மீண்டும் நாம் அணுக வேண்டாம் என்று சுதீசிடம் கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது. 

மேலும் அ.தி.மு.கவை விட தற்போதைக்கு தினகரன் பெட்டர், எனவே அவரிடம் பேசிப் பார்க்கலாம் என்கிற ரீதியில் சுதீசிடம் பிரேமலதா கூறியதாக சொல்லப்படுகிறது. இதில் சுதீசுக்கும் உடன்பாடு இருப்பதாக சொல்கிறார்கள். ஆனால் கூட்டணி பேச்சுவார்த்தை குழுவில் இடம்பெற்றுள்ள சிலர் தினகரன் சரிவரமாட்டார் அவர் அ.தி.மு.க நிர்வாகிகளை விட பிகு பண்ணுவார் என்று கூறியிருக்கிறார்கள். அதற்கு பேசிப் பார்க்கலாம் என்று சுதீஷ் சொன்னதாக சொல்கிறார்கள். 

அதே சமயம் கூட்டணிக்கு எந்த கட்சி வரும் என்கிற எதிர்பார்ப்பில் தினகரன் வழி மேல் விழி வைத்து காத்திருக்கிறார். அ.தி.மு.க – தே.மு.தி.க இடையிலான பேச்சு சுமூகமாக இல்லை என்பதை அறிந்துள்ள தினகரன் விரைவில் சுதீஷ் தரப்பை தொடர்பு கொள்வதற்கான வாய்ப்பு இருப்பதாக சொல்கிறார்கள். தொகுதிகளின் எண்ணிக்கை கணிசமாக இருக்கும் பட்சத்தில் தினகரன் – விஜயகாந்த் கூட்டணி உறுதி என்றும் பேசிக் கொள்கிறார்கள்.