தமிழுக்கும் தமிழர்களுக்கும் பொதுவான திருவள்ளுவரை வைத்து அரசியல் செய்வது கண்டிக்கத்தக்கது என்று தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தனது ட்விட்டர் பக்கத்தில் திருவள்ளுவருக்கு காவி உடை, விபூதி பட்டை, ருத்ராட்சை கொட்டை ஆகியவற்றைக் கொண்டு உருவாக்கப்பட்ட திருவள்ளுவரை வெளியிட்டது. இது பெரும் சர்ச்சையாக வெடித்தது. பாஜகவுக்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள் திரண்டன. இதற்கிடையே பிள்ளையார்பட்டியில் மர்ம ஆசாமிகளால் திருவள்ளுவர் சிலை சேதப்படுத்தப்பட்டது. ஏற்கனவே இருந்த பிரச்னையோடு இதுவும் சேர்ந்துகொண்டதால், திருவள்ளுவர் சர்ச்சை ஓயவில்லை. இந்தச் செயலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்தனர்.


இதற்கிடையே திருவள்ளுவர் எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்ற சர்ச்சையான விவாதம் தற்போது தமிழகத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் திருவள்ளுவர் சிலையை வைத்து அரசியல் செய்வது கண்டனத்திற்குரியது என அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் உள்ள தேமுதிக தெரிவித்துள்ளது.


இது குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருவள்ளுவரை வைத்து அரசியல் செய்வதை தவிர்க்க வேண்டும். அதோடு தமிழுக்கும், தமிழர்களுக்கும் பொதுவான திருவள்ளுவரை வைத்து அரசியல் செய்வது கண்டிக்கத்தக்கது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக கவனம் செலுத்தி, இதுபோன்ற நிகழ்வுகள் மேலும் தொடராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.