சுருக்கமாகச் சொன்னால் உதயநிதி ஸ்டாலினின் அரசியல் வருகைக்கு  அரசியல் விவாத மேடையில் பல விமர்சனங்களும் விவாதங்களும் நடந்துகொண்டிருக்கும் இதே வேலையில், தேமுதிக தலைவர் கேப்டன் தனது மகனையும் களத்தில் இறக்கிவிட்டுள்ளார்.  

 விஜயகாந்த் தேமுதிகவை கடந்த 2005ஆம் ஆண்டு தொடங்கினார். 2006ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் விஜயகாந்த் மட்டும் (விருத்தாசலம் தொகுதி) ஜெயித்திருந்தாலும் 2011ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து 29 தொகுதிகளில் வெற்றி பெற்றது. விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவரானார்.

 வீரியம் அதிகம் கொண்ட விஜயகாந்த் சும்மா இருப்பாரா?  சட்டசபையிலேயே அதகளம் பண்ணி உடனே கூட்டணியை முறித்துக்கொண்டார். சில தலைவர்கள் வேறு கட்சிகளுக்கு சென்றனர்.  கட்சியின் தலைவர் விஜயகாந்தும் உடல்நலம் பாதிக்கப்பட்டு முழுமையாக அரசியலில் ஈடுபடமுடியாமல் உள்ள நிலையில், விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரனை கட்சிக்குள் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது. இந்நிலையில் நேற்று(அக்டோபர் 6) நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டு இதனை விஜய பிரபாகரன் உறுதிப்படுத்தியுள்ளார்.


 
பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூரில் நேற்று நடைபெற்ற தேமுதிக 11ஆம் ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அவர், “ பெங்களூரு போன்ற நகரங்களுக்கு நிகரான வளர்ச்சியைச் சென்னை நகரம் அடையவில்லை. அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்க நல்ல தலைவர் வரவேண்டும். அந்த தலைவர் யார் என்பது உங்களுக்கே தெரியும். 

லட்சம் பேர் வந்தாலும் தேமுதிகவில் இருந்து ஒரு செங்கல்லைக்கூட அசைக்க முடியாது. என்னுடன் பல லட்சம் இளைஞர்கள் கை கேர்க்க வேண்டும். வரவுள்ள தேர்தலில் தேமுதிக வெற்றிபெற்று ஆட்சியமைக்கும்” என்று தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”அரசியல் என்பது சேவையை தேடி வருவது. பொறுப்பைத் தேடி வருவதல்ல. சில ஐடியாக்கள் உள்ளன, அவற்றை செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன். தொடர்ந்து அரசியலில் ஈடுபடுவேன். என்னுடன் இளைஞர்கள் சேர்ந்தால் கட்சியை வலுப்படுத்துவேன்” என்று கூறினார்.

 திமுகவில் உதயநிதி ஸ்டாலினுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது என்று பரவலாக பேச்சு எழுந்துள்ள நிலையில், ஸ்டாலின் பாணியைப் பின்பற்றி விஜயகாந்த்தும் தன் மகன் விஜயபிரபாகரனை அரசியலில் களம் இறக்கியுள்ளதாகவே கருதப்படுகிறது.