வங்கி ஏலம் அறிவித்துள்ள 100 கோடி ரூபாய் சொத்துக்களை மீட்க தேமுதிக பொருளாளர் பிரேமலதா கடன் தொகையான ஐந்தரைக் கோடி பணத்தை நிர்வாகிகளிடம் கேட்டு வருவதாகக் கூறப்படுகிறது. 

மக்களவை தேர்தலில் தேமுதிக 4 தொகுதிகளில் போட்டியிட்டு வாஷ் அவுட் ஆனது. இதற்கு காரணம் தலைமையில் இருந்து தேர்தல் செலவுக்கு நிதி கொடுக்கவில்லை என்று தேமுதிக வேட்பாளர்களில் இருந்து தொண்டர்கள் வரை கடும் கோபத்தில் இருந்தனர். அத்தோடு தேமுதிக மாநில கட்சி அந்தஸ்தையும் இழந்தது. அதிமுகவிடம் 400 கோடி ரூபாயை வாங்கிக் கொண்டு வேட்பாளர்களுக்கு கொடுக்கவில்லை என தொண்டர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது. இதனால் தேமுதிக தலைமை சரியில்லை என்று மாவட்ட நிர்வாகிகள் கடுப்பில் இருந்தனர். 
 
இந்த நிலையில் விஜயகாந்தின் வீடு, கல்லூரி உள்ளிட்ட 100 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் ஏலத்துக்கு வருவதாக வங்கியில் இருந்து நோட்டீஸ் அனுப்பி அறிவித்தது. வரும் 26ம் தேதி ஏலம் நடைபெற இருப்பதாக கூறப்பட்டுள்ளது. 

இந்நிலையில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா, தலைவர் விஜயகாந்த் இருவரும் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் மற்றும்  நிர்வாகிகளுக்கு ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். இந்தக் கூட்டம் தேமுதிக அலுவலகத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு அதிர்ச்சி தரும் வகையில் கடன்களுக்கு வட்டி கட்ட, மாவட்ட நிர்வாகிகளிடம் நிதியுதவி கேட்டதாக தேமுதிக வட்டாரங்கள் தெரிவிகின்றன. இதனால் தேமுதிக நிர்வாகிகள் தலைமை மீது கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. 

அதிமுகவிடம் இருந்து எந்தப்பணத்தையும் பெறவில்லை என்பதை நிர்வாகிகளிடம் நம்ப வைக்கவே இப்படியொரு நாடகத்தை பிரேமலதா நடத்துகிறார். ஐந்தரை கோடி பணத்தை அவர்களால் புரட்ட முடியாதா? எல்.கே.சுதீஷுடம் இல்லாத சொத்துக்களா? தேமுதிகவை பொறுத்தவரை விஜயகாந்த் குடும்பம் மட்டுமே கோடீஸ்வரர்களாக உள்ளனர். மற்ற நிர்வாகிகள் அனைவரும் மிடில்கிளாஸ் மக்கள் தான். ஏற்கெனவே கட்சிக்காக கடன்பட்டு அடைக்க முடியாமல் இருக்கிறோம். இப்போது நிதியை கொடுக்க நாங்கள் எங்கே போவோம் எனப் புலம்புகிறார்கள் தேமுதிக நிர்வாகிகள்.