தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் தனது கைக் காசை செலவழித்தே கட்சி நடத்தி வருவதாகவும், மற்றவர்கள் கூறுவது போல் பணத்தாசை இல்லாதவர் என்றும் அக்கட்சியில் இருந்து பிரிந்து தே.மு.தி.கவில் இணைந்த அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார்.

ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒரு கட்சியிடம் காசு வாங்குபவர் என்று விஜயகாந்த் மீது ஒரு குற்றச்சாட்டு உண்டு. 2011ல் அ.தி.மு.கவுடன் கூட்டணி வைக்க கணிசமான தொகை கைமாறியதாக ஒரு பேச்சு உண்டு. இதே போல் 2014 நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க கூட்டணிக்கு செல்ல 600 கோடி ரூபாய் பணம் பெற்றார் விஜயகாந்த் என்றொரு புகாரும் உண்டு. 

இதே போல் 2016 தேர்தலில் தி.மு.கவுடன் கூட்டணி அமைக்காமல் இருக்கவும் பெருந்தொகை விஜயகாந்துக்கு கொடுக்கப்பட்டதாகவும் ஒரு குற்றச்சாட்டு உண்டு. இது மட்டும் அல்லாமல் தே.மு.தி.க மாநாடு தொடங்கி அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் பணம் செலவழிக்குமாறு நிர்வாகிகளை விஜயகாந்த் கசக்கி பிழிந்ததாகவும், இதனால் பலர் கட்சியை விட்டே வெளியேறிவிட்டதாகவும் கூட சொல்லப்படுவதுண்டு. விஜயகாந்த் கட்சி துவங்கிய போது தே.மு.தி.கவில் இணைந்த மாஃபா பாண்டியராஜன், அந்த கட்சிக்கு ஏராளமாக செலவு செய்ததாக கூறப்படுவதுண்டு. மேலும் தே.மு.தி.கவிற்கு பணம் செலவு செய்பவர்களில் மிக முக்கியமானவர் மாஃபா என்றும் பேச்சு இருந்தது. 

பணம் அதிகம் செலவு செய்தும் தே.மு.தி.கவில் மதிப்பு கொடுக்கப்படவில்லை என்பதற்காகவே மாஃபா பாண்டியராஜன் அ.தி.மு.கவில் இணைந்தார் என்றும் சொல்வார்கள். இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு மாஃபா பாண்டியராஜன் பேட்டி அளித்தார். அப்போது, தே.மு.தி.கவில் இருந்து விலகியதற்கான காரணம் குறித்து மாஃபாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு கேப்டன் தன் மீது சந்தேகப்பட்டதே தான் கட்சியில் இருந்து விலக காரணம் என்று கூறினார்.

 

வரிசையாக தே.மு.தி.க எம்.எல்.ஏக்கள் சென்று ஜெயலலிதாவை பார்த்த போது தானும் ஜெயலலிதாவை சென்று சந்திக்க உள்ளதாக விஜயகாந்திற்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட மனஸ்தாபமே தான் விலக காரணம் என்று மாஃபா கூறினார். அப்போது, தே.மு.தி.கவிற்கு நீங்கள் நிறைய செலவு செய்தீர்கள் ஆனால் விஜயகாந்த் உங்களை அங்கீகரிக்காததே நீங்கள் விலக காரணம் என்று சொல்லப்படுவது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.

 

இதற்கு பதில் அளித்த மாஃபா, அனைவருமே ஒரு தவறான கண்ணோட்டத்தில் உள்ளனர். நான் தொழில் அதிபராக இருந்தாலும் கூட தே.மு.தி.கவிற்கு என்று நான் பெரிய அளவில் செலவு செய்தது இல்லை, நன்கொடை கூட கொடுத்தது இல்லை. விஜயகாந்துடம் நன்கொடை கொடுங்கள் என்று என்னிடம் கேட்டது இல்லை. வேறு யாரிடமும் அவர் கேட்டது இல்லை. உண்மையை சொல்ல வேண்டும் என்றால் விஜயகாந்த் தான் சம்பாதித்த பணத்தை செலவு செய்து தான் கட்சியை நடத்தி வந்தார். தற்போதும் அப்படித்தான் நடத்திக் கொண்டிருப்பார் என்று கருதுகிறேன். மேலும் அவர் பணத்தாசை இல்லாதவர் என்றும் நான் உறுதியாக கூறுவேன். இவ்வாறு அவர் பதில் அளித்தார்.