தமிழகத்துக்கு நேற்று வருகை தந்த சீனா அதிபர் ஜின்பிங்குடன் பிரதமர் மோடி மாமல்லபுரத்தில் முறைசாரா மாநாட்டில் பேச்சுவார்த்தை நடத்தினார். புராதான சிற்பங்களைப் பார்வையிட்டு இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தனர். இன்று 2-ம் நாளாக இரு தலைவர்களும் கோவளத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர். இப்பேச்சுவார்த்தைக்குப் பின்னர் சென்னையில் இருந்து நேபாளத் தலைநகர் காத்மண்டுவுக்கு ஜின்பிங் புறப்பட்டுச் சென்றார்.

இந்நிலையில், தமிழ்நாட்டின் சகோதர சகோதரிகளுக்கு நான் சிறப்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எப்போதும் போல், அவர்களது இதமான அன்பும், உபசரிப்பும் தனித்து நிற்கின்றன. ஆற்றல் மிக்க இந்த மாநிலத்தின் மக்களுடன் இருப்பது எப்போதும் மகிழ்ச்சி அளிப்பதாகும் என ட்வீட் போட்டுள்ளார்.

இது தொடர்பாக விஜயகாந்த் இன்று வெளியிட்ட அறிக்கை; பிரதமர் நரேந்திர மோடி, தமிழகத்தில் சீன அதிபருடன் இரண்டு நாட்களாக தங்கியிருந்து , தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டை அணிந்து, தமிழக உணவை உண்டு, தமிழகத்தின் பெருமைகளையும் , மாமல்லபுரம் சிற்ப கலைகள் குறித்தும், தமிழகத்திற்கும் சீனாவுக்கும் இடையே இருந்த பண்டையகால நட்பு குறித்தும் விளக்கி, அதை மீண்டும் புதுப்பித்து, இரு நாட்டு உறவையும் பலப்படுத்தி, உலக நாடுகளின் ஒட்டு மொத்த கவனத்தை ஈர்த்தது மிகவும் பாராட்டுக்குரியது. அதேபோல, இன்று காலையில் நடைபயிற்சியின் போது, கடற்கரையில் உள்ள பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றி, தூய்மையான இந்தியாவை உருவாக்க எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் வரவேற்கத்தக்கது, பாராட்டுக்குரியது என இவ்வாறு அதில் கூறியுள்ளார்.