மக்களவைத் தேர்தலுக்கு  சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் காட்சிகள் தேர்தல் தொடர்பான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விசிக, மமக, இடதுசாரிகள், முஸ்லிம் லீக் கட்சிகள் இணையவுள்ளது இந்தக்கூட்டணி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. 

திமுக தலைமை கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு துரைமுருகன் தலைமையில் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. அதிமுகவுடன் பாஜகவும், பாமகவும் கூட்டணி குறித்து மறைமுகமாகப் பேச்சுவார்த்தை நடத்திவருவதாகத் தகவல் வெளியான நிலையில், அதிமுக சார்பிலும் தங்கமணி வேலுமணி தலைமையில் தொகுதிப் பங்கீடு குழு அமைக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து அதிமுக கூட்டணியில் இடம்பெற இருப்பதாக சொல்லப்படும் தேமுதிக மதுரை தொகுதியை குறிவைத்துள்ளதாக தெரிகிறது. இதில்  பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடப் போவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.  

இந்நிலையில்  கூட்டணி  குறித்து பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்துள்ளார் தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் நேற்று அமெரிக்காவிலிருந்து அறிக்கை வெளியிட்டு அசத்தியுள்ளார், “மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த தேமுதிக சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

குழுவின் தலைவராக கட்சியின் துணைச் செயலாளரும், விஜயகாந்தின் மைத்துனருமான எல்.கே.சுதீஷ் நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் அவைத் தலைவர் இளங்கோவன், கொள்கை பரப்புச் செயலாளர் அழகாபுரம் மோகன்ராஜ், துணைச் செயலாளர்கள் பார்த்தசாரதி, ஏ.எஸ்.அக்பர் ஆகியோரும் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். தேமுதிக சார்பில் மற்ற கட்சிகளுடன் இவர்கள் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

விஜயகாந்த் அமெரிக்காவிலிருந்து தேர்தல் குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில் தேமுதிக தொண்டர்கள் உற்சாக வெள்ளத்தில் மிதந்துள்ளனர். தேர்தலுக்கு இன்னும் நான்கு மாதங்கள் இருக்கும் நிலையில் தலைவர் மீண்டு அதே கம்பீரக் குரலோடு வந்து தேர்தல் பிரச்சாரம் செய்வார் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.