தேமுதிகவை பலப்படுத்தும்விதமாக விஜய பிரபாகரனை கட்சியின் இளைஞரணி தலைவராக நியமிக்க விஜயகாந்த் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேமுதிகவின் ஒன் மேன் ஆர்மியாக இருந்தார் கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்த். அரசியல் ரீதியில் தவறான முடிவுகள், தொடர் தோல்விகள், விஜயகாந்தின் உடல்நிலை பாதிப்பு போன்ற காரணங்களால் தேமுதிக தொடர்ந்து சரிவை சந்தித்துவருகிறது. 2014-ல் பாஜக கூட்டணியில் தமிழகத்தில் தலைமை வகித்த தேமுதிக, அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் 4 சீட்டுகளைப் பெறுவதற்குள் அக்கட்சிக்கு போதும்போதும் என்றானது.
மேலும் உடல்நிலை பாதிக்கப்பட்ட விஜயகாந்த் பழையபடி மீண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவரால் முன்புபோல கட்சி பணிகளில் ஈடுபட முடியவில்லை. அவ்வப்போது அறிக்கைகள் வெளியிட்டுவந்தாலும், கட்சி நிர்வாகிகள், பொதுமக்களையும் தொடர்ச்சியாக சந்திக்க முடியாத நிலையிலேயே உள்ளார். அந்தப் பொறுப்பை பிரேமலதா எடுத்துக்கொண்டிருந்தாலும், முன்புபோல தேமுதிக இல்லை என்ற வாதமும் வைக்கப்படுகிறது.
இந்நிலையில் விஜயகாந்தின் மூத்தமகன் விஜய பிரபாகரனை முழுமையாக அரசியலில் களமிறக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தேர்தலுக்கு முன்பிருந்தே விஜய பிரபாகரன் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார், தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டார். ஆனால், தேர்தல் நேரத்தில் தலைவர்களை ஒருமையில் விமர்சித்து சொதப்பினார். இருந்தபோதும் விஜய பிரபாகரனை, அரசியலில் முமுமையாக களமிறக்குவதில் விஜயகாந்த் உறுதியாக இருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 
முதல் கட்டமாக மக்கள் மத்தியிலும் தொண்டர்களிடமும் அறிமுகமும் நெருக்கமும் கிடைக்க வேண்டும் என்பதற்காக மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்லும்படி விஜய பிரபாகரனுக்கு விஜயகாந்த் உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து விரைவில் தன் சுற்றுப்பயணத்தை விஜய பிரபாகரன் தொடங்க இருப்பதாகவும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கிராமங்கள்தோறும் பயணம் மேற்கொண்டு கட்சி நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனையத்து அவரை இளைஞர் அணி தலைவராக நியமிக்கவும் விஜயகாந்த் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆகஸ்ட் 25 அன்று விஜயகாந்தின் பிறந்த நாள் கொண்டாடப்பட உள்ளது. அதனையொட்டி விஜய பிரபாகரன் விஷயத்தில் விஜயகாந்த் அறிவிப்பு வெளியிடலாம் என்றும் தேமுதிக வட்டாரங்கள் பரபரகின்றன.