ஹோமியோபதி, ஆயுர்வேதம் போன்றவற்றால் பரிந்துரைக்கப்பட்ட கபசுர குடிநீர் உள்ளிட்ட  'ப்ரோபைலக்டிக்' மருந்துகள் அடங்கிய தொகுப்பை தமிழகம் முழுவதும் வீடு வீடாக சென்று வழங்க வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.


இதுதொடர்பாக விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் ஊரங்கு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது மதுரை மாவட்டத்தில் ஊரடங்கு விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு அமலில் இருக்கும் காலத்தில் கொரோனா கட்டுக்குள் இருப்பதாகவும், ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டவுடன் கொரோனா பரவல் அதிகரித்து வருவதாகவும் தமிழக அரசு தொடர்ந்து கூறிவருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு என்பது மட்டும் ஒரு தீர்வாகாது. தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அனைத்து வியூகங்களை அமைத்து வீடு வீடாக சென்று பல்வேறு முயற்சிகள் எடுப்பதை போன்று, தற்போது கொரோனா பரவலை தடுக்க, தமிழக அரசு வீடு வீடாக சென்று பரிசோதனை நடத்த வேண்டும்.


மேலும், ஹோமியோபதி, ஆயுர்வேதம் போன்றவற்றால் பரிந்துரைக்கப்பட்ட கபசுர குடிநீர் உள்ளிட்ட (PROPHYLACTIC DRUGS) 'ப்ரோபைலக்டிக்' மருந்துகள் அடங்கிய தொகுப்பை தமிழகம் முழுவதும் வீடு வீடாக சென்று வழங்க வேண்டும். மேலும், சமூக இடைவேளியை பின்பற்றாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு, ஊரடங்கை மீறுவோர் மீதும் மிகப்பெரிய தொகையை அபராதமாக விதிக்க வேண்டும் என்றும் அவ்வாறு விதித்தால்தான் வீட்டை விட்டு வெளியே வர மக்கள் அச்சப்படுவார்கள்.


நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி வீடு வீடாக சென்று மருந்து வழங்கும் திட்டத்தை செயல்படுத்த முடியாது என தமிழக அரசால் சொல்ல முடியாது. ஆயுஷ் திட்டத்தின் மூலம் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு பல கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. முதற்கட்டமாக கொரோனா பாதிப்பு அதிகமுள்ள சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை ஆகிய ஐந்து மாவட்டங்களில் மருந்து வழங்கும் திட்டத்தினை செயல்படுத்த வேண்டும். இந்த செயல் திட்டம் சிறப்பாக வெற்றிபெறும் போது, தமிழகத்தின் மற்ற மாவட்டங்களிலும் இதனை விரிவுப்படுத்த ஏதுவாக இருக்கும்.


கொரோனா பாதிப்பு அதிகமுள்ள சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் மருந்து வினியோகம் செய்வதால், பெரிய அளவில் அரசுக்கு நிதிச்சுமை ஏற்படாது. எனவே, இதுபோன்ற ஆக்கப்பூர்வமான செயல்களில் தமிழக அரசு ஈடுபட்டு, தமிழகத்தில் இருந்து கொரோனாவை நிரந்தரமாக ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்று அறிக்கையில் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.