இந்த தேர்தலில் அநியாயத்துக்கு விமர்சனம் வாங்கிக் கட்டிய அரசியல் குடும்பங்களில் மிக முக்கியமானது இரண்டு. ஒன்று டாக்டர் ராமதாஸ் குடும்பம். மற்றொன்று விஜயகாந்தின் குடும்பம். இதில் விஜயகாந்த் உடல் நலனில்லாமலும், எதையும் தெளிவாய் புரிந்து கொள்ளும் நிலையில் இல்லை! என்று ஒரு பேச்சு உலவுவதால், அவரை மட்டும் விட்டு அவரது மனைவி பிரேமலதா, மச்சான் சுதீஷ் மற்றும் மூத்த மகன் விஜய் பிரபாகரன் ஆகியோரை வெளுத்தெடுக்கின்றனர். 

அதிலும் ‘கூட்டணிக்காக அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. இரண்டு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்திய  தே.மு.தி.க. அண்ட்கோ, இரண்டு பேரில் யார் அதிகம் பணம் தருகிறார்களோ அவர்களுடன் கூட்டணி சேர தயாராக இருந்தது. பக்காவாய் பேரம் நடத்தினார்கள்.  அதனால்தான் இந்த இழுபறி!’ என்று கொளுத்திப் போட்டனர். இதற்கு மிக  வன்மையான மறுப்பு ரியாக்‌ஷன்களை காட்டியது தே.மு.தி.க. தரப்பு. அதன் பின் அ.தி.மு.க. கூட்டணியில் ஒருவழியாக இணைந்துவிட்டது தே.மு.தி.க.

இந்த சூழலில் இப்போது கேப்டன் ஃபேமிலியை மையமாக வைத்து புதிதாக ஒரு ‘பேர’ கதையை இழுத்துவிட்டிருக்கிறது. ஆனால் இது அரசியல் பேரம் இல்லை, சினிமா பேரம். என்னது கேப்டன் மீண்டும் நடிக்க வர்றாரா? ’நடக்கவே முடியாத’ காரியம் நடக்குமா?! என்று சிலர் எதிர்கேள்வி கேட்டனர். ஆனால் விஷயமோ வேறு. அதாவது விஜயகாந்துக்கு இரண்டு மகன்கள். மூத்தவர் விஜய் பிரபாகரன். அதிக  உடல் எடையோடு இருந்த இவர், அரசியல் மற்றும் சினிமா இரண்டிலுமே நாட்டமில்லாமல் இருந்தார். செல்லப்பிராணிகள் பிரியரான இவர், காஸ்ட்லி ரக நாய்களை வளர்த்தார். சர்வதேச அளவில்  ஷோக்களில் பரிசு வென்றன இவரது நாய்கள். மேலும், பேட்மின்டனில் ஆர்வமுடைய, அணிகளை ஏலம் எடுத்து நடத்தினார். அதிலும் நல்ல பெயர். 

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் தனது உடல் எடையை நன்கு குறைத்து, ஸ்லிம் அண்டு ஸ்லீக் ஆனவர் அப்படியே மெதுவாக அரசியலுக்குள் நுழைந்தார். ஆனால அவரது மேடைப்பேச்சுகள் இரண்டு பெரிய கட்சிகளையும் ஓவராக புண்படுத்தி, விமர்சனம் எழுந்ததன் விளைவாக இதோ இப்போது அமைதி காக்கிறார்.

 நெட்டிசன்கள் இவரை நிறையவே வெச்சு செய்துவிட்டனர் . தாறுமாறாக பேசியதற்காக தவிக்கத் தவிக்க வாங்கிக் கட்டிவிட்டார். ஆனால் இப்போது ‘பேர’ விஷயத்தில் வாங்கிக் கட்டுவது இவரில்லை, இவரது தம்பியான நடிகர் (?!) சண்முக பாண்டியன். 
சில வருடங்களுக்கு முன்பாக ‘சகாப்தம்’ எனும் படத்தின் மூலம் திரைத்துறைக்குள் வந்தார் இவர். யாரோ ஒரு புது இயக்குநரின் பெயரைப் போட்டு, விஜயகாந்தே இயக்கிய படம் அது. ஆனால் செம்ம அடி. விஜயகாந்தின் வெறி ரசிகர்கள் மட்டுமே கூட்டம் கூட்டமாய் தியேட்டருக்கு போய் டிக்கெட் வாங்கி உள்ளே உட்கார்ந்தோ, தூங்கியோ, பேசிப் பொழுதைகழித்தோ, சீட்டாடியோ அந்தப் படத்தை ‘ஓட்டினர்’.

அதன் பின் இயக்குநர் முத்தையாவின் இயக்கத்தில் ‘மதுரை வீரன்’ எனும் படத்தில் நடித்தார். ஓரளவு எதிர்பார்க்கப்பட்ட படம் அது. சகாப்தம் அளவுக்கு படு தோல்வி இல்லையென்றாலும், இந்தப் படத்தில் இயக்குநர்  கம் நடிகர் சமுத்திரக்கனியின் பெயர் ஓரளவு பேசப்பட்டது.

 இந்நிலையில்  விஜயகாந்தின் உடல் நிலை பிரச்னையால் புதுப்படம் எதிலும் கமிட் ஆகாத (!? சரி சரி விடுங்க பாஸ்) சண்முக பாண்டியன், இப்போது அப்பா ஓரளவு நலமாகி வந்துவிட்ட நிலையில், கதை கேட்க முயன்று வருகிறாராம் சண்முக பாண்டியன். ஆனால் இடையில் சினிமா டச் இல்லாமல் விட்டதால் அவரது உடல் எடை மிக அதிகமாகிவிட்டதாம். அதை குறைத்தபடியே கதை கேட்கிறாராம். 

இந்த நிலையில் அவரிடம் கதை சொல்ல வருபவர்கள் முடிவில் தெறித்து ஓடுகின்றனராம். காரணம்? ‘அம்மாம் பெரிய சம்பளம்’ கேட்கிறாராம். இயக்குநர்கள் ‘தம்பி, நீங்க கேப்டனோட பையன் அப்படிங்கிறதாலேதான் இந்த வாய்ப்பே. ஆனா நீங்க கேட்கிற சம்பளத்துக்கு பிஸ்னஸ் ஆகாது.’ என்று சொன்னாலும் மசிவதில்லையாம். ’என்னோட பழைய படத்தோட பிஸ்னஸ் தெரியுமா உங்களுக்கு! என்ன பேசுறீங்க? இவ்வளவு கொடுத்தா நடிப்பேன்’ என்கிறாராம். இதுதான் இப்போது கோலிவுட்டில் வைரலாகி, அப்படியே நெட்டிசன்கள் காதில் விழ, வெச்சு செய்ய துவங்கிவிட்டனர். 

அதில் ஹைலைட்டாக...


“அரசியல்லதான் பேரம்னா, சினிமாவுலேயும் பேரமா? தம்பி சம்முவம், உங்களோட ரெண்டு படமும் பப்படம் ஆன கத எங்களுக்கு நல்லாவே தெரியும். அதிலேயும்  உங்க மொத படம் சகாப்தத்தை சுரேந்திரன் அப்படிங்கிற பாவப்பட்ட கொயந்த டைரக்ட் பண்றதா போட்டுட்டு உங்க அப்பா வெச்சு செஞ்சதை நாங்க மறக்க மாட்டோம்! ரெண்டாவது படத்துல உங்க டீம் அடக்கி வாசிச்சதாலே ஏதோ பொழச்சுது. அதனால இந்த சீன் போடுற சங்கதியெல்லாம் வேணாம்.” என்று கலாய்த்துக் கொட்டியுள்ளனர். 

அதே வேளையில் ’கேப்டன் மகன் சண்முக பாண்டியன வெச்சு அவங்க குடும்பமே படமெடுத்தால்தான் உண்டு. வெளியில உள்ள எவன் பணத்தப் போடுவான்? அதனால சம்முவம் அதிகம் சம்பளம் கேக்குறதா சொல்றது பொய்யி. சொந்த தயாரிப்புட்ட சம்பளம் கேக்க முடியுமா? ஏன் பாஸ் காமெடி பண்றீங்க?’ என்று மீண்டும் ஒரு டீம் வாஷ் பண்ணி ஊற்றியிருக்கிறது. சத்ய சோதனைதான் கேப்டனுக்கு!