இடைத்தேர்தல் பிரசாரம் இன்று ஓய்வடையும் நிலையில்  தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த், அதிமுக வேட்பாளரை ஆதரித்து விக்கிரவாண்டியில் பிரசாரம் செய்கிறார். 
நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்து போட்டியிட்டது. உடல்நல பிரச்சினை காரணமாக விஜயகாந்தால் பிரசாரத்துக்கு செல்ல முடியவில்லை. தேர்தல் பிரசாரம் ஓய்வடைவதற்கு முதல் நாள் வட சென்னை தொகுதியில் மட்டும் தேமுதிக வேட்பாளரை ஆதரித்து விஜயகாந்த் பிரசாரம் செய்தார். மேலும் கட்சி நிகழ்ச்சிகளில் மட்டும் அவ்வப்போது தலைகாட்டிவரும் விஜயகாந்த், அண்மையில் நடந்து முடிந்த திருப்பூர் மாநாட்டில் நீண்ட நாள் கழித்து பேசினார். ‘எனக்காக ஒரு பொழுது விடியும்’ என்று விஜயகாந்த் அந்தக் கூட்டத்தில் பேசியதோடு அடுத்த முறை ஒரு மணி நேரம் பேசுவதாகவும் அறிவித்தார். 
 இந்நிலையில் அதிமுகவின் விருப்பத்தின் பேரில் விக்கிரவாண்டி தொகுதியில் தேர்தல் பிரசாரம் செய்ய விஜயகாந்த் முடிவு செய்திருந்தார். ஏற்கனவே அக்கட்சியின் பொருளாளரும் அவருடைய மனைவியுமான பிரேலமதா அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். விழுப்பு உள்ளிட்ட வட மாவட்டங்களில் தேமுதிகவுக்கு செல்வாக்கு இருப்பதால், விஜயகாந்த் பிரசாரத்துக்கு வர வேண்டும் என்று அதிமுக விரும்பியது. அதை ஏற்று இன்று விக்கிரவாண்டி தொகுதியில் விஜயகாந்த் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.


இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடைய உள்ள நிலையில், விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட ஓரிறு இடங்களில் விஜயகாந்த் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். தேர்தல் பிரசாரத்தில் சில வார்த்தைகள் மட்டும் விஜயகாந்த் பேசுவார் தேமுதிகவினர் தெரிவித்துள்ளனர்.