விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தும் பிரசாரத்தில் குதிக்க இருக்கிறார். விஜயகாந்தின் தேர்தல் பிரசார அறிவிப்பு வெளியாகி உள்ளதால் அதிமுகவினர் குஷியில் உள்ளனர்.


வட மாவட்டங்களில் விஜயகாந்துக்கு கணிசமாக ஆதரவு உண்டு. குறிப்பாக கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் அவருக்கு கணிசமான ஆதரவு இருந்ததை முன்பு பார்க்க முடிந்தது. 2006-ல் விருத்தாச்சலம், 2011-ல் ரிஷிவந்தியம், 2016-ல் உளுந்தூர்பேட்டை ஆகிய வட மாவட்ட தொகுதிகளில் போட்டியிட்டதையே உதாரணமாகக் கூறலாம். தற்போது இடைத்தேர்தல் நடைபெறும் விக்கிரவாண்டி தொகுதி விழுப்புரம் மாவட்டத்தில் வருவதால்,  விஜயகாந்த் தேர்தல் பிரசாரத்துக்கு வந்தால் நன்றாக இருக்கும் என்று அதிமுக எதிர்பார்த்தது.
நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தபோதும், உடல்நல பிரச்சினை காரணமாக பிரசாரத்துக்கு அவரால் செல்ல முடியவில்லை. வட சென்னை தொகுதியில் மட்டும் தேமுதிக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்தார். அண்மையில் நடந்து முடிந்த திருப்பூர் மாநாட்டில் நீண்ட நாள் கழித்து பேசினார். ‘எனக்காக ஒரு பொழுது விடியும்’ என்று விஜயகாந்த் பேசியதோடு அடுத்த முறை ஒரு மணி நேரம் பேசுவதாகவும் அறிவித்தார்.

 
 இந்நிலையில் அதிமுகவின் விருப்பத்துக்கு ஏற்ப விக்கிரவாண்டி தொகுதியில் தேர்தல் பிரசாரம் செய்ய விஜயகாந்த் முடிவு செய்திருக்கிறார். வரும் 19ம் தேதி அன்று விக்கிரவாண்டி தொகுதியில் மட்டும் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்கிறார் விஜயகாந்த். இந்தத் தகவலை தேமுதிக பொருளாளர் பிரேமலதாவும் உறுதி செய்திருக்கிறார். 
அண்மையில் நடைபெற்ற தேர்தல் செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய அமைச்சரும் தேர்தல் பொறுப்பாளருமான சி.வி. சண்முகம், “விஜயகாந்த் மட்டும் நல்ல உடல் நலத்தோடு இருந்திருந்தால் ஸ்டாலின் காணாமல் போயிருப்பார்” என்று பேசியிருந்தார். வட மாவட்டங்களில் விஜயகாந்துக்கு ஆதரவு இருப்பதால்தான் அமைச்சரே அவ்வாறு பேசினார். இந்நிலையில் விஜயகாந்தின் பிரசார வருகை தேமுதிகவினரை மட்டுமல்ல, அதிமுகவினரையும் குஷியில் ஆழ்த்தியுள்ளது.