vijayakanth condemned
அரசு நிதியானது மக்களுக்கு ஒதுக்கப்படவில்லை என்றும் அவை அரசியல்வாதிகளுக்கே ஒதுக்கப்படுவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார்.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கன மழை பெய்து வருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் கடலூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது.
சென்னையில் பெய்துவரும் கன மழை காரணமாக தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால், வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. சில தினங்களுக்கு முன்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிகாரிகள் சென்னை மற்றும் வேளச்சேரி பகுதிகளில் ஆய்வு செய்தனர். மழை நிவாரணமாக மத்திய அரசிடம் ஆயிரத்து 500 கோடி ரூபாய் கேட்டிருந்தார். மேலும் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த், வேளச்சேரி, பள்ளிக்கரணை, நாராயணபுரம் பகுதியில் இன்று ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வின்போது பிரேமலதா விஜயகாந்தும் உடனிருந்தார். விஜயகாந்த் ஆய்வின்போது, மழை பாதிப்புகளை பொதுமக்களிடம் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடியிடம் 1500 கோடி ரூபாய் மழை நிவாரணம் கேட்டது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த விஜயகாந்த், மத்திய அரசிடம் கேட்டது நிவாரணப் பணிக்கு அல்ல என்றும் எடப்பாடி பழனிசாமியின் சொந்த
செலவுக்கு என்று கூறினார்.
தமிழகத்தில் உள்ள ஏரிகளில் தூர் வாருவதற்காக அரசு ஒதுக்கியதாக கூறப்படும் ரூ.400 கோடி எங்கே போனது என்றும் விஜயகாந்த் கேள்வி எழுப்பினார். அரசு நிதியானது மக்களுக்கு ஒதுக்கப்படவில்லை என்றும் அவை அரசியல்வாதிகளுக்கு ஒதுக்கப்படுவதாகவும் விஜயகாந்த் குற்றம் சாட்டினார்.
நடிகர் கமல் ஹாசன் தொடர்பாக செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அவர், நடிகர் கமல் ஹாசன், கட்சி தொடங்கினால் வரவேற்பேன் என்றும் விஜயகாந்த் கூறினார்.
