vijayakanth ask Why do we cuddle the neighboring state
மழைநீரை சரியாக சேமித்து வைத்திருந்தாலே அண்டை மாநிலங்களிடம் கேட்க வேண்டிய அவசியம் இருக்காது என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
காவிரி நதி நீர் பிரச்சனை தொடர்பாக தமிழகம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவில்,192 டிஎம்சி போதாது. எனவே கூடுதலாக 72 டிஎம்சி நீரை தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டும் எனவும்,காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் அமிதவா ராய், கான்வில்கர் அடங்கிய அமர்வு, அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்தது. கடந்த ஆண்டு செப்டம்பர் 20ம் தேதி அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தன.
இந்நிலையில், நூற்றாண்டுகள் கடந்தும் தொடர்ந்து வந்த காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. அதில், காவிரி நீரை எந்த மாநிலமும் உரிமை கொண்டாட முடியாது. தமிழகத்தில் 20 டிஎம்சி நிலத்தடி நீர் உள்ளது. எனவே தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி நீரை கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும் என தீர்ப்பளித்தது.
காவிரியிலிருந்து கூடுதல் நீர் தமிழகத்திற்கு கிடைக்கும் வகையில் தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இருந்ததையும் உச்சநீதிமன்றம் குறைத்திருப்பது தமிழக விவசாயிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து விவசாயிகள் முதல் பல்வேறு அரசியல் தலைவர்கள் கருத்து கூறி வருகின்றனர். அந்த வகையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறுகையில், தண்ணீர் என்பது எந்த மாநிலத்திற்கும் சொந்தம் இல்லை என்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது எனவும் மத்திய அரசு மாநிலங்களுக்கிடையே வஞ்சனையை பார்க்காமல் நடுநிலையோடு செயல்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் காவிரி பிரச்னையை பொறுத்தவரை நதிகள் இணைப்புதான் நிரந்திர தீர்வாக அமையும் எனவும் மழைநீரை சரியாக சேமித்து வைத்திருந்தாலே அண்டை மாநிலங்களிடம் கேட்க வேண்டிய அவசியம் இருக்காது எனவும் கூறியுள்ளார்.
